தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரை அங்கீகரித்துள்ளது தேர்தல் ஆணையம். கட்சியின் சின்னமான கடிகாரமும் அஜித்பவாருக்கே வழங்கப்பட்டுள்ளது. இது சரத் பவாருக்கான மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக நீண்ட காலம் இருந்த சரத் பவார், சோனியா காந்தியின் தலைமையை ஏற்காமல் அக்கட்சியில் இருந்து விலகினார். அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவார் தேசிய அளவில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளையும் பதிவு செய்தார். இதனால் நாட்டிலுள்ள முக்கிய தலைவர்களில் ஒருவராக சரத் பவார் மாறினார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவாருக்கு அடுத்த இடத்தில் அவரின் அண்ணன் மகன் அஜித் பவார் மற்றும் மகள் சுப்ரியா சுலே ஆகியோர் இருந்தனர். மகாராஷ்டிராவில் இந்த கட்சி காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியுடன் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் இருந்தது.
மகாராஷ்டிராவில் முக்கிய கட்சியாக இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் கடந்த ஆண்டு உள்கட்சி மோதல் வெடித்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், கட்சியில் குழப்பதை ஏற்படுத்தி பாஜக ஆதரவுடன் ஆட்சியிலுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசில் இணைந்து துணை முதல்வரானார்.
இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத்பவாரும் அஜித் பவாரும் உரிமை கொண்டாடி வந்தனர். இருதரப்பிலும் தேசிய அளவிலான நிர்வாகிகளையும் அவர்கள் போட்டி போட்டு நியமனம் செய்தனர். இரு தரப்புமே தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தேர்தல் ஆணையம், தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அஜித்பவாருக்கு ஒதுக்கியுள்ளது. அஜித்பவாருக்கே அதிக அளவிலான நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் அவருக்கே கடிகாரம் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், சரத்பவார் தனக்கு விருப்பமான பெயர் மற்றும் சின்னத்தை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத் பவார். ராஜ தந்திர நடவடிக்கைகளில் பெயர் பெற்றவராக அவர் அறியப்படுகிறார். ஆனாலும், இப்போது தன்னால் ஆரம்பிக்கப்பட்ட சொந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தையே சரத் பவார் இழந்துள்ளது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!
முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!
பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!