ராஜ்யசபா ஆசைகாட்டி கட்சிகளை கூட்டணிக்கு இழுக்கிறதா அதிமுக?

ராமதாஸ், அன்புமணி, எடப்பாடி பழனிசாமி
ராமதாஸ், அன்புமணி, எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்

எதிர்பார்த்த அளவுக்கு கூட்டணி அமையாததால், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தங்களை விட்டு விலகிய தேமுதிகவையும்,  தேர்தலுக்குப் பிறகு விலகிய பாமகவையும் இப்போது ராஜ்யசபா சீட் ஆசைகாட்டி தங்கள் பக்கம் ஈர்க்கப் பார்க்கிறது அதிமுக.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பு அடைந்து வருகின்றன. திமுக கூட்டணி பழைய பலத்துடன் வலுவாக இருக்கும் நிலையில், கல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் தங்களோடு சேர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே இப்போது பாஜக அணியில் இருக்கிறது. கடந்த முறை அந்தக் கட்சிக்கு வழங்கிய ஒரு இடத்தை இம்முறை கமலுக்கு ஒதுக்கும் திட்டத்தில் இருக்கிறது திமுக. 

திமுக கூட்டணி எக்ஸ்ட்ரா பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் எதிர் முகாமான அதிமுக அணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறு கட்சிகள் மட்டுமே தற்போதுவரை இணைந்துள்ளன. பெரிய கட்சிகள் எதுவும் இன்னும் அந்தப்பக்கம் திரும்பவில்லை. அதனால் தனது பழைய சகாக்களான பாமகவையும் தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்கும் உத்திகளை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது அதிமுக. 

கே.பி.முனுசாமி தலைமையிலான கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினர் இவ்விரு கட்சிகளிடமும் முதற்கட்ட பேச்சுவார்த்தையை ரகசியமாகவே பேசிமுடித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்விரு கட்சிகளும் செலவில்லாமல் டெல்லிக்குச் செல்லும் ராஜ்யசபா சீட்களை குறிவைத்துள்ளன. அவர்களின் ஆசையை பூர்த்திசெய்வதாகச் சொல்லியே முதல்கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக முடித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இது குறித்தான செய்திகள் வெளியானதுமே, “பாமக இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இதுபற்றி பேசி முடிவெடுத்து அதன் பிறகு தான் கூட்டணி யாருடன் என்பதை அறிவிப்போம்” என்று அவசர அவசரமாய் அறிக்கை கொடுத்தார் அன்புமணி ராமதாஸ். தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் பாஜக மீதும் அவர்கள் மீது பாஜகவுக்கும் பரிவுப் பார்வை இருக்கிறது. அதனால், அதிமுகவை ஒதுக்கிவிட்டு பாஜகவிடம் பேசிப்பார்த்தால் என்ன என்ற கணக்கும் இந்தக் கட்சிகளுக்கு இருக்கிறது.

மோடியுடன் ராமதாஸ்
மோடியுடன் ராமதாஸ்

கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தங்களுக்கு 41 தொகுதிகளைக் கேட்டது. ஆனால், 12 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பில்லை என பிடிவாதம் பிடித்தது அதிமுக. அதனால் சற்றே இறங்கி வந்த தேமுதிக, பாமகவுக்கு நிகராக தங்களுக்கு 23 இடங்களையாவது ஒதுக்கக் கேட்டது. அதற்கும் கைவிரித்துவிட்டது அதிமுக. அதனால் கடைசி நேரத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது தேமுதிக. 

இந்தக் கசப்பான அனுபவம் தந்த பாடத்தால் இம்முறை அதிமுகவை கண்டுகொள்ளாமல் பாஜக பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறது தேமுதிக. இதைப் புரிந்துகொண்டு பாஜகவும் விஜயகாந்த் மறைவின்போது மத்திய அமைச்சர்களையும் மாநில ஆளுநர்களையும் பிரேமலதாவுக்கு ஆறுதல் சொல்ல அனுப்பி வைத்தது. யாருக்கும் இல்லாத வகையில் பிரதமர் மோடி விஜயகாந்துக்கு புகழஞ்சலி கடிதம் எழுதினார்.

இதன் அடுத்த நகர்வாக யாரும் எதிர்பாராத விதத்தில் விஜயகாந்துக்கு பத்ம விபூஷண் விருதையும் அறிவிக்க அக்கறை எடுத்துக்கொண்டது பாஜக. இந்த நிலையில், தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் கசிந்ததுமே கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி செல்வத்தை விஜயகாந்த் நினைவிடத்துக்கு அனுப்பிவைத்து பிரேமலதாவை சந்திக்க வைத்தது பாஜக.

பிரேமலதா
பிரேமலதா

தனது தம்பி சுதீஷை டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்பது பிரேமலதாவின் நெடுநாளைய ஆசை. ஒருவேளை, பாஜகவுடன் தேமுதிக கைகோக்கும் பட்சத்தில் வேறு மாநிலத்தில் இருந்தாவது தங்களுக்கு ராஜ்யசபா பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரேமலதா முன்வைப்பார். அதை பாஜகவும் பரிசீலிக்கும். அதிமுக இதையெல்லாம் உணர்ந்துதான் பிரேமலதா கேட்கும் உத்திரவாதத்தை அளித்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். 

ஒரு ராஜ்யசபா சீட்டும் ஐந்து தொகுதிகளும் தங்களுக்கு வேண்டும் என்பதே தேமுதிக தரப்பில் அதிமுகவிடம் வைக்கப்பட்ட கோரிக்கை. அதற்கு, ராஜ்யசபா சீட்டுடன் இரண்டு தொகுதிகள் மட்டும் தர அதிமுக முதற்கட்ட சம்மதம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் பேசிய பிறகு தேவைப்பட்டால் கூடுதல் தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்குவது பற்றியும் பரிசீலிக்கலாம் என்ற உத்தரவாதமும் தரப்பட்டதாக  தகவல்கள் கசிந்துள்ளன.

ராமதாஸை வரவேற்கும் பழனிசாமி...
ராமதாஸை வரவேற்கும் பழனிசாமி...

கடந்த மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாஜக-வை உள்ளடக்கிய அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது பாமக. அப்போது 7 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி, ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. இதனால், அடுத்து வந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக கூட்டணியை முறித்துக்கொண்டது பாமக. “இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை” என்றும் அப்போது பாமக பிரகடனம் செய்தது. 

இருந்த போதும் இக்கட்டான சூழலை சமாளிக்க பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கி இருக்கிறது அதிமுக. பாமக கேட்கும் தொகுதிகளைக் கொடுக்க தயாராக இருப்பதாகச் சொல்லித்தான் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பாமக பொதுக்குழு...
பாமக பொதுக்குழு...

ஆனால், தேமுதிகவை போலவே பாமகவும் ராஜ்யசபா சீட்டுக்கு அதிமுகவிடம் அடிப்போட்டிருக்கிறது. அத்துடன் கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கிய 7 தொகுதிகளும் வேண்டும் என்பதும் அந்தக் கட்சியின் நிபந்தனை என்கிறார்கள். இந்த நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி சென்னையில் கூடிய பாமக பொதுக்குழுவில், மாநில நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதும் கவனிக்கத் தக்கது. இதன் மூலம், பாஜகவுக்கும் கதவுகள் திறந்திருப்பதை சூசகமாக சொல்லி இருக்கிறது பாமக.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இதுகுறித்து அதிமுக முன்னாள அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம். ’’தேர்தல் கூட்டணியை முடிவுசெய்ய இன்னும் நாட்கள் இருக்கிறது. அதிமுக அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டது.  ஒரேநாள் இரவில்கூட கூட்டணிகள் அமைவதில் பெரிய மாற்றங்கள் நடந்த வரலாறு உண்டு.  அதிமுக ஒரு பெரிய கட்சி. அதற்கான அணுகுமுறை, நடைமுறைகள் நிறைய உள்ளன. என்றாலும் கூட்டணி விஷயத்தில் அதிமுக எவ்வித தயக்கமும் இல்லாது மும்முரமாகவே செயல்படுகிறது.  

பாமக மற்றும் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. அவர்கள் ஒன்றும் எங்களுக்கு எதிரிக்கட்சிகள் அல்ல; திமுக தான் எங்களுக்கு எதிரி. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டோம். அதனால் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் ராஜ்யசபா சீட் தருவதாக வாக்குறுதி கொடுத்து அவர்களை கூட்டணிக்கு அழைப்பதாக சொல்வது அனுமானமான கேள்வி.  அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார். 

அதிமுகவை போலவே பாஜகவும் தேமுதிகவுக்கும் பாமகவுக்கும் ஆஃபர்களை அள்ளி வீசி இருப்பதாகச் சொல்கிறார்கள். அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா இருக்கை, தேர்தல் செலவுகளை சமாளிக்க நிதி ஆதாரம் என்றெல்லாம் தாராளம் காட்டி இவ்விரு கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜகவும் தூண்டில் போடுகிறது. இரண்டு கட்சிகளும் சிக்கப் போவது பிராந்திய தூண்டிலிலா, தேசிய தூண்டிலிலா என்பது அடுத்த சில நாட்களில் அம்பலத்துக்கு வந்துவிடும்!

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்... அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in