தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

மயிலாடுதுறையைத் தர்றோம் மறுக்காம வாங்க... மஜகவுக்கு தூண்டில் போடும் அதிமுக!

மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கிறது. இப்போது சிறுபான்மையினர் ஓட்டுகளை ஈர்க்கும் விதமாக இந்தக் கட்சியை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழின் அன்சாரி
தமிழின் அன்சாரி

2016 சட்டமன்றத் தேர்தலின்போது மனிதநேய மக்கள் கட்சி திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. அதனால் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களை அந்தக் கட்சியைவிட்டு பிரித்து தனி அணியாக உருவாக்கி அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கச் செய்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதைத் தொடர்ந்து அன்சாரி புதிதாக உருவாக்கிய மனிதநேய ஜனநாயக கட்சிக்கு  அந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் கொடுத்தார் ஜெயலலிதா. அதில் நாகப்பட்டினம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றியும் பெற்றார்.

ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் தெளிவில்லாமல் இருந்தார் அன்சாரி. அதன் பிறகு ஒட்டியும் ஒட்டாமலும் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த அன்சாரி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை உதறிவிட்டு திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தனக்கு சீட் கொடுக்கும் என எதிர்பார்த்தார் அன்சாரி. ஆனால், இவருக்கு சீட் கொடுத்தால் மனிதநேய மக்கள் கட்சி கோபித்துக்கொள்ளும் என்பதால் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியது திமுக. என்றாலும் பொறுமைகாத்த அன்சாரி, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்த விவகாரத்தில் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். அதனால், அன்சாரி எப்படியும் அதிமுக பக்கம் சாயந்துவிடுவார் என்ற பேச்சுக் கிளம்பியது.

இந்த நிலையில் தற்போது, இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு திமுக அரசுக்கு தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்துள்ளார். இதை வைத்து, அவர் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடரலாம் என்ற பேச்சுகள் மேலோங்கி இருக்கிறது. இதற்கு மேலும் தாமதித்தால் சிக்கலாகிவிடும் என்றுணர்ந்து அன்சாரியை தங்கள் பக்கம் இழுத்துவைப்பதற்கான வேலையை அதிமுக முடுக்கி விட்டிருக்கிறது.

இது தொடர்பாக அதிமுக தரப்பிலிருந்து அன்சாரியிடம் பேசியவர்கள், “அதிமுக கூட்டணிக்கு வந்தால் மயிலாடுதுறை தொகுதியில் நீங்களே போட்டியிடலாம்” என்று உத்தரவாதம் அளித்ததாகச் சொல்கிறார்கள். அன்சாரியை தங்கள் பக்கம் இழுக்கும் பட்சத்தில் அவரை வைத்தே தமிழகம் முழுவதும் சிறுபான்மையினர் மக்கள் மத்த்தியில் பிரச்சாரம் செய்யவைக் கலாம் என்பது அதிமுக தலைகளின் கணக்காக இருக்கலாம்.

பாஜகவுடன் சகவாசம் வைத்திருந்ததால் அதிமுகவை சிறுபான்மையினர் விரோத கட்சியாக திமுக பரப்புரை செய்கிறது. இப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாலும் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சியைத்தான் அதிமுக ஆதரிக்கும் என்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இதற்கெல்லாம் அன்சாரி மூலமாக பதிலடி கொடுக்க வைக்கும் திட்டத்திலேயே அவருக்கு கூட்டணி தூண்டில் போடுகிறதாம் அதிமுக. இருப்பினும் இதுவரை தனது முடிவை அறிவிக்காமல் அமைதிகாக்கும் அன்சாரி, இம்மாத இறுதிக்குள் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

இதையும் வாசிக்கலாமே...


தொடக்கக் கல்வித்துறையில் 1768 காலிப்பணியிடங்கள்...பிப்.14 முதல் விண்ணப்பிக்கலாம்!

அதிகாலையில் அதிர்ச்சி... சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி 8 பேர் பலி!

கதறும் பயணிகள்... கிளாம்பாக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் விடியவிடிய போராட்டம்!

தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அரபிக்குத்து பாட்டுக்கு பெல்லி டான்ஸில் தெறிக்க விட்ட கீர்த்தி ஷெட்டி... வைரலாகும் வீடியோ!

x
காமதேனு
kamadenu.hindutamil.in