அடுத்தடுத்து 6 தேர்தல்களிலும் தோல்வி... இனியாவது மீளுமா அதிமுக?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அடுத்தடுத்து 6 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ள அதிமுக, நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என கருத்துக்கணிப்புகள் வெளியாக இருப்பது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் 2வது முறையாக தொடர் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் சார்பில் 6வது முறையாக முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா ஏற்றிருந்தார். இதையடுத்து 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைபாடு காரணமாக ஜெயலலிதா உயிரிழந்ததை அடுத்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அக்கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக 2017 பிப்ரவரி 16-ம் தேதி அவர் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி கடந்த 2017 பிப்ரவரி 16-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்ட முடிவுகளின்படி, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

2021-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியை இழந்திருந்த போதும், அதற்கு முன்னதாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்திருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியிருந்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அந்தத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக, தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது.

இருப்பினும் ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கப்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வமும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், அவரது மகனும் அதிமுகவின் ஒரே எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் மக்களவையில் அதிமுகவிற்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையே நீடித்து வந்தது.

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்
திமுக கூட்டணி கட்சி தலைவர்கள்

2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தொடங்கி, 2021 சட்டசபை தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், கிராமப்புற உள்ளாட்சி தேர்தல், 9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என மொத்தம் 6 தேர்தல்களில் வரிசையாக அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது மக்களவை தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் என்கிற கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

மக்களவைத் தேர்தல் குறித்த இந்தியா டுடே வின் மூட் ஆப் தி நேசன் கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 38 இடங்களில் வென்றிருந்த நிலையில், இந்த முறை 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திமுகவின் வாக்கு வங்கி 47 சதவீதமாக இருக்கும் எனவும், பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜகவின் வாக்கு வங்கி 15 சதவீதமாக உயரம் எனவும் அதில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் அதிமுகவின் வாக்கு வங்கி குறித்து தெரிவிக்கப்படவில்லை. மாறாக 'others' என்ற பிரிவில் மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவீதம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மற்றொருபுறம் டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் 59.7 சதவீதம் வாக்குகளை பெறும் என கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவீதம் வாக்குகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக 16 சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் என அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில், திமுகவின் இந்தியா கூட்டணி 36 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும், அதிமுக 2 இடத்திலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6 தோல்விகளுக்கு பிறகு 7வது முறையாக அதிமுக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இரட்டை தலைமை நீக்கப்பட்டு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்ற பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் கணிசமான வெற்றி பெறுவதே அவருடைய பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், அதிமுகவின் எதிர்காலத்தை முடிவு செய்யவும் முக்கியமான முடிவாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கக்கூடிய இந்த கருத்துக்கணிப்புகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிற வகையில் வெளியாகி இருப்பது, அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in