‘உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட’... தமிழகத்தில் அதிமுக - பாஜக பரிதாபத்தை சுட்டிக்காட்டும் மாரிதாஸ்

எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை

மக்களவைத் தேர்தல் முடிவுகளில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருப்பது குறித்து பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸ் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கிய 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வாகை சூடி வருகிறது. திமுக கூட்டணியை எதிர்த்துக் களமிறங்கிய அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகள் படுதோல்விகரத்தில் உள்ளன. இந்தத் தேர்தலில் முன்னதாக, திமுகவை கடுமையாக எதிர்ப்பதில் ஒருமித்த நிலைப்பாடு கொண்டிருக்கும் பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே மக்களவைத் தேர்தலில் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

யூடியூபர் மாரிதாஸ்
யூடியூபர் மாரிதாஸ்

ஆனால் பாஜகவை தமிழகத்தில் தனித்து வளர்க்கும் நோக்கில் அதன் மாநிலத்தலைவர் அண்ணாமலை, அதிமுகவுக்கு எதிராகவும் கடுமையாக களமாடினார். இது உட்பட பல்வேறு விவகாரங்களில் அதிமுக மற்றும் மாநில பாஜக இடையே கடுமையாக முட்டிக்கொண்டது. பாஜக தேசியத் தலைமையுடன் அதிமுக இணக்கம் பாராட்டியபோதும், அண்ணாமலை உள்ளிட்ட மாநில பாஜகவினரால் சீற்றம் கொண்டது. இதன் முடிவாக அதிமுக - பாஜக கூட்டணி வாய்ப்பு முறிந்தது.

இதனை சரி செய்யும் முயற்சியில் தமிழக பாஜக இறங்காததில், இரண்டு கட்சிகளும் தனியாக தத்தம் கூட்டணியை நிர்மாணித்தன. திமுக எதிர்ப்பு வாக்குகள் இவ்வாறு சிதறியதில் தற்போது 2 கட்சிகளும் அதன் பலனை வேதனையுடன் அறுவடை செய்திருக்கின்றன. இதனை பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸ் தனது எக்ஸ் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். தனது விமர்சனக் கருத்துக்களுக்காக, தமிழக பாஜகவின் சிலர் வார் ரூமை பயன்படுத்தி தன்னை இழிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்ட. இதுதான் தமிழகத்தில் அதிமுக - பாஜக நிலை. தமிழ்நாடு பாஜக - அதிமுக கூட்டணி உடைய கூடாது; கூடுதல் பொறுப்போடு அணுக வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட என் போன்றவர்களை அந்த நேரத்தில், வார் ரூம் வைத்துத் திட்டி தீர்த்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது ஒரு உண்மை. அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் உங்கள் மனதுக்கு கசப்பாக இருப்பினும், அது உண்மை என்பதால் அதை ஏற்று, அதில் உரியத் திருத்தம் செய்து, வெற்றியைச் சிந்தித்திருக்க வேண்டியது அரசியல் அவசியமாகிறது" என்று மாரிதாஸ் பதிவிட்டிருக்கிறார்.

அந்த எக்ஸ் தள பதிவில் மேலும் அவர், “ஒரு வேளை ஆந்திரா அல்லது ஒடிசா கை கொடுக்கவில்லை எனில், இன்று ஆட்சி அமைப்பதே சிரமாகியிருக்கும். 39+1 தொகுதிகள் கொண்ட முக்கியமான மாநிலமான தமிழகத்தில் பூஜ்ஜியத்தில் இருப்பது என்பது எந்த அரசியல்வாதியும் ஏற்க கூடிய விசயமல்ல. ஒன்று கட்டமைப்பு உருவாக்க வேண்டும். அல்லது கட்டமைப்பு உள்ள கட்சியோடு கூட்டணியை வலுவாக எடுத்து செல்வது அவசியம். இனி வரும் காலங்களில் உண்மைகளுக்கு காது கொடுங்கள். வெறும் கோஷத்திற்கு அல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இவர் அண்ணாமலையின் தலைமையிலான தமிழக பாஜகவின் போக்கை விமர்சிக்கவும், ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கவும் செய்திருந்தார். சமூக ஊடகங்களில் மட்டுமே பாஜகவினர் ஆக்டிவாக இருப்பதாகவும், திமுக, அதிமுக போன்று கட்சிக்கான கட்டமைப்பை களத்தில் உருவாக்குவதில்லை என்றும் குறைபட்டு வந்தார். அவை உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுக்காக அண்ணாமலை ஆதரவாளர்களால் இணையவெளியில் மாரிதாஸ் ட்ரோல் செய்யப்பட்டார். தற்போதைய மாரிதாஸ் கருத்துக்களை அடுத்தும், அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மாரிதாஸை சீண்டி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in