பாஜக ஆட்சி மீண்டும் அமைவதில் சிக்கல்? பீதியால் மும்பை பங்குச்சந்தை 4000 புள்ளிகள் சரிவு; ஆபத்தில் அதானி பங்குகள்!

கௌதம் அதானி
கௌதம் அதானி

ஆளும் பாஜக தலைமையிலான ஆட்சி மத்தியில் மீண்டும் அமையுமா என்பது தொடர்பான பீதியில் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

நாட்டின் உள்ளேயும் வெளியேயும் அசாதாரண சூழல் என எவை எழுந்தாலும், அவை முதலடியாக பங்குச்சந்தைகளை பதம் பார்ப்பது வழக்கம். இயற்கைச் சீரழிவு, போர் பதற்றம், பொருளாதார மந்தம் என நாட்டின் இயல்பு ஏற்ற இயக்கத்துக்கு ஆளாகும்போது, அவற்றையொட்டியே பங்குச்சந்தைகளும் ஏறி இறங்கும். தற்போதைய மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரமும் பங்குச்சந்தையை பாதித்ததில், இன்றைய தினம் கடும் சரிவை அவை எதிர்கொண்டுள்ளன.

பாஜக, காங்கிரஸ்
பாஜக, காங்கிரஸ்

2 தினங்கள் முன்னதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதும் பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன. குறிப்பாக ஆளும் கட்சிக்கு ஆதரவான ஆதானி குழுமம் போன்ற பங்குகள், பங்குச்சந்தையின் உயர்வை வழி நடத்தின. பங்குசந்தையின் புதிய வரலாற்று உச்சமாக சென்செக்ஸ் 76,738 புள்ளிகளை தொட்டது. அதேபோன்று தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டியும் 23,338 என இதுவரையில்லாத உச்சத்தை எட்டியது.

முகேஷ் அம்பானியை வீழ்த்தி ஆசியாவின் பெரும்பணக்காரராக கௌதம் அதானி மீண்டும் உயர்ந்தார். ஆனால் இன்று காலை வாக்குப்பதிவுகள் தொடங்கியது முதலே பங்குச்சந்தையில் ஊசலாட்டம் தொடங்கியது. வர்த்தகம் தொடங்கிய 2 மணி நேரத்தில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் சரிந்தது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த பீதியே இதற்கு காரணமாகும்.

தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக கூட்டணியே முன்னிலை வகித்தபோதும், கருத்துக்கணிப்புகள் மற்றும் பாஜக எதிர்பார்த்த பெரும்வெற்றிக்கான போக்கு தென்படவில்லை. இதற்கு எதிர்திசையில் இந்தியா கூட்டணி சுமார் 230 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக 2019 தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 தொகுதிகளில் பாஜக கூட்டணி பின்னடைவை சந்திக்க, இந்தியா கூட்டணி சுமார் 100 தொகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது.

பங்குச்சந்தை சரிவு
பங்குச்சந்தை சரிவு

இந்த அறிகுறிகள் பாஜக ஆட்சிய அமைப்பதில் சிக்கல் எழலாம் என்பதையும், அவை ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்புகளை தரலாம் என்ற ஊகங்களையும் விதைத்துள்ளன. ஊகபேர வணிகத்தின் அடிப்படையில் இயங்கும் தினசரி வர்த்தகர்கள் இதனால் தங்கள் பங்குகளை வேகமாக விற்று வருகிறார்கள். இவையே பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாகி உள்ளது. 2 தினங்கள் முன்னதாக பங்குச்சந்தையின் எழுச்சிக்கு காரணமான அதானி குழுமத்தின் பங்குகளே இன்றைய வீழ்ச்சிக்கும் காரணமாகி உள்ளன. சென்செக்ஸ், நிஃப்டி போன்றவை 4 சதவீதம் சரிய, அதானி குழும பங்குகள் 6 சதவீதத்துக்கும் மேலாக சரிந்து வருகின்றன. இந்தப்போக்கில் அடுத்த கட்டமாக, பாஜக ஆட்சி அமைவதில் சிக்கல் உறுதியாகுமெனில், அதானி பங்குகளை ஆபத்தில் தள்ளவும் செய்யலாம்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in