சிறையில் இருந்தபடி சுயேட்சையாக வென்ற ‘பிரிவினைவாத’ வேட்பாளர்கள்... எம்.பி-யாக கடமையாற்றுவது எப்படி?

அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங்
Updated on
2 min read

பிரிவினைவாத குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருவர், இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளனர். இந்த சூழலில் இவர்கள் இருவரும் எவ்வாறு எம்பியாக பதவியேற்பார்கள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இஞ்சினியர் ரஷீத் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர் முறையே காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள். இருவருமே, பிரிவினைவாத சக்திகளுடன் சேர்ந்து செயல்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையில் இருப்பவர்கள். இவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் என்பதால், சிறையில் இருந்தபடியே மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார்கள். ஆச்சரியமூட்டும் வகையில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

ஷேக் அப்துல் ரஷீத்
ஷேக் அப்துல் ரஷீத்

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமான ‘ஊபா’வின் கீழ், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டவர் இஞ்சினியர் ரஷீத் எனப்படும் ஷேக் அப்துல் ரஷீத். இவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் 2,04,142 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தேசத்தின் பிரிவினைவாத இயக்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, அவற்றுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டின் 5 ஆண்டுகளாக, டெல்லியின் திகார் சிறையில் ரஷீத் அடைபட்டு இருக்கிறார்.

நடப்பு மக்களவைத் தேர்தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில், தேர்தலுக்கு 2 வாரங்கள் முன்பாக வேட்புமனுத் தாக்கல் செய்தார் ரஷீத். திகார் சிறைக் கம்பிகளுக்குப் பின்னிருக்கும் ரஷீத்துக்காக அவரின் 2 மகன்களும் களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்கள். எதிர்த்துப் போட்டியிட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லாவை தோற்கடித்து ரஷீத் வெற்றி பெற்றார். தன் மீதான குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து சட்டப்போராட்டத்தை தொடர்ந்து வரும் ரஷீத்துக்கு, மக்கள் தந்திருக்கும் அங்கீகாரம் அவரது சட்டப்போராட்டம் வேகம் பிடிக்க உதவக்கூடும்.

பஞ்சாபியர்களுக்கு என தனி நாடு கோரும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியான அம்ரித்பால் சிங், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி அசாம் மாநிலத்தின் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பஞ்சாபில் உள்ள கதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக நின்று 1,97,120 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் இந்த இருவரின் வெற்றியும் உறுதியானது முதலே, இவர்களை முன்னிறுத்தி பல கேள்விகள் வலம் வருகின்றன. இவர்கள் இருவரும் எவ்வாறு எம்பியாக பதவிப் பிரமாணம் எடுப்பார்கள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்ற கேள்விகளும் அவற்றுக் அடங்கும். இவை தொடர்பாக சிறைத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார செயலகம் ஆகியவற்றில் அறியக்கிடைத்த தகவல்கள், சிறைப்பறவைகளான இரு எம்.பி-களுக்கும் காத்திருக்கும் சவால்களை விளக்கி உள்ளன.

மக்களவையில் உறுப்பினர்கள்
மக்களவையில் உறுப்பினர்கள்

இதன்படி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இருவரும், நீதிமன்ற உத்தரவைப் பெற்றே நாடாளுமன்றம் செல்ல முடியும். இவர்களுடன் உதவி ஆணையர் அந்தஸ்திலான போலீஸ் அதிகாரிகள் உடன் செல்வார்கள். ஆனால் போலீஸ் அதிகாரிகளுக்கு நாடாளுமன்றத்தின் உள்ளே அனுமதி கிடையாது என்பதால், நாடாளுமன்ற பாதுகாப்புக்கு பொறுபேற்றிருக்கும் வீரர்கள் வசம் இவர்கள் ஒப்படைக்கப்படுவர்.

அதன் பின்னரான பாதுகாப்பு நடைமுறைகளை, அவர்களே பார்த்துக்கொள்வார்கள். மற்றபடி நாடாளுமன்றத்தின் வழக்கமான அனைத்து நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட அனுமதி உண்டு. அதே போன்று செல்போன் பயன்பாடு, மக்களவை உறுப்பினர் பணி சார்ந்த வெளியாருடனான உரையாடல்களை, சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ள தடையில்லை.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in