"இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு என்பது அறமற்றது" என்று இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்டு வருதாகவும், அதன் காரணமாக அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திரைப்பட இயக்குநர் கவுதமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'விடுதலைப் புலிகள் மீதான மத்திய அரசின் தடை நீட்டிப்பு என்பது நேர்மையற்ற அறமற்ற ஒரு செயலாகும். இந்தியாவுக்கு எதிராக இந்தியாவே விதித்துக் கொண்ட தடை இது என்று இந்தியா உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஏறத்தாழ ஐந்தாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய யூனியன் புலிகள் மீதான தடையை நீக்கி அது வன்முறை இயக்கமல்ல, தமிழீழ தமிழ்க்குடி மக்களின் விடுதலைக்கான இயக்கம் என்று பிரகடனப்படுத்தியது. அப்படி இருக்க 2009 ஆம் ஆண்டு முள்ளி வாய்க்காலில் திட்டமிட்ட தமிழின அழிப்பு நடந்து முடிந்து, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலோ அல்லது உலகிலுள்ள எந்தவொரு நாட்டிலோ விடுதலைப்புலி அமைப்பினால் சிறியதொரு அசம்பாவிதம் கூட நடக்காத நிலையில் தமிழ் நாட்டின் மீது பழியினைப் போட்டு மத்திய அரசு புலிகளின் மீதான தடையை மேலும் நீட்டித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் தமிழர்களை ஒடுக்குவதிலும் இல்லாமல் ஒழிப்பதிலும் ஆகப் பெரும் வித்தியாசம் இல்லை என்பதையே இந்நிலைபாடு இன்னொருமுறை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
தமிழீழத் தமிழர்களும் விடுதலைப் புலிகளும் தங்களது தாய்நாடு தமிழீழம் என்றும் தந்தையர் நாடு இந்தியா என்றும் கூறி பெருமை கொண்டு வாழ்ந்தவர்கள். 2009ல் விடுதலைப் புலிகளின் அரசு இருந்தவரை தமிழ்நாட்டு மீனவ தமிழர்கள் ஒருவர் மீது கூட சிங்கள அதிகாரவர்க்கம் கை வைத்தது இல்லை. அதன் பிறகு எத்தனை எத்தனை படுகொலைகள். விடுதலைப்புலிகள் அரசு இருந்தவரை இந்துமா கடல் பகுதியிலோ இலங்கைத்தீவிலோ அத்துமீறலோடு ஒரே ஒரு சீனர் கூட நடமாடியது இல்லை. ஆனால் இன்று கூட்டம் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். சிங்கள அதிகாரவர்க்கம் 99 ஆண்டுகள் ஒப்பந்தத்தோடு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு தாரை வார்த்திருக்கிறது. மிகச் சரியாகப் பார்த்தால் இந்தியா தடுத்திருக்க வேண்டும். புலிகள் இருந்திருந்தால் இன்னேரம் ஓட ஓடத் துரத்தி அடித்திருப்பார்கள். இந்துமா கடலுக்கும் இந்தியாவிற்கும் காலம் முழுக்க அரணாக நின்றவர்கள் விடுதலைப் புலிகள்.
சிங்களப் பகுதியில் மட்டுமல்ல தமிழீழப் பகுதியிலும் கச்சத்தீவிலும் சீனர்களின் அத்துமீறல், ஆக்கிரமிப்பு பெருகிக்கொண்டே வருகிறது. இந்திய அரசு இதையெல்லாம் எப்பொழுது உணர போகிறது. இந்தியா- சீன யுத்தம் நடந்தபோது இலங்கை சீனா பக்கம்தான் நின்றது என்கிற வரலாற்றை மிக இலகுவாக மறந்து விடப் போகிறதா இந்தியா. புலிகள் மீதான தடை நீட்டிப்பு மூலம் சீன அரசுக்கு இந்திய அரசு உதவி செய்திருக்கிறது என்பதுதான் யதார்த்தத்தின் பேருண்மை. இந்து மாக்கடலின் அதிகாரம் இந்தியாவிடம் இருக்கவேண்டுமானால் தமிழீழம் தமிழர்களிடமும் விடுதலைப் புலிகளிடமும் இருந்திருக்க வேண்டும். இல்லையேல் ஒருநாள் இந்துமாக்கடல் சீனாவிடம் இருக்கும். அப்போது இந்தியா யாருக்கு கீழ் இருக்கும் என்பது காலத்திற்கே வெளிச்சம்' என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!
வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!
ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!
காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!