‘மோடி பதவி விலக வேண்டும்’ - பதிலடி ஆட்டத்தை ஆரம்பிக்கும் காங்கிரஸ்!

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

மக்களவைத் தேர்தலின் பரபரப்பான முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்களுக்கு மத்தியில், பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மக்களவைத் தேர்தலின் முன்னிலை நிலவரங்களில் பாஜக கூட்டணியே பெரும்பான்மை இடங்களை தக்க வைத்துள்ளது. சுமார் 290 இடங்களில் முன்னிலை வகிப்பதால், இதே போக்கில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமையவே வாய்ப்புள்ளது. எதிர் தரப்பில் கடந்த 2019 தேர்தலை விட சுமார் 100 இடங்களில் எழுச்சி பெற்றிருக்கும் இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பதற்கான வெற்றி வாய்ப்புகளுக்கு காத்திருக்கிறது.

மோடி - ராகுல்
மோடி - ராகுல்

இதனிடையே தனித்து 370 தொகுதிகள், கூட்டணியாக 400 தொகுதிகளில் அசாத்திய வெற்றி பெறுவோம் என இறுமாந்திருந்த பாஜக அதன் எதிர்பார்ப்பில் சறுக்கியுள்ளது. அக்கட்சி எதிர்பார்த்த பெரும் வெற்றி வாய்ப்பில் அடி விழுந்திருக்கிறது. கூட்டணியாக 300 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கும் பாஜவின் இந்த பின்னடைவை, காங்கிரஸ் கட்சி குறி வைத்து தாக்கியுள்ளது. இந்த வகையில் ‘பாஜக தனது இடங்களை இழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது.

2 தினங்களுக்கு முன்னதாக வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் இந்தியா கூட்டணிக்கு பாதகம் சேர்க்கும் வகையில் வெளியானதில், காங்கிரஸ் மிகவும் சோர்ந்து போயிருந்தது. இதனையடுத்து கருத்துக்கணிப்பு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் அறிவித்தது.

இதனை பாஜக கடுமையாக கிண்டல் செய்தது. ”தோல்வியைக் கண்டு காங்கிரஸ் ஓடி ஒளிய வேண்டாம்” என்ற பாஜகவின் பரிகாசம் மற்றும் தோழமை கட்சிகளின் ஆலோசனை ஆகியவற்றால், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் முன்வந்தது.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரங்களில் பாஜக எதிர்பார்த்த பெருமித வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடனே பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பாகி உள்ளது. பாஜகவின் இந்த பின்னடவை காங்கிரஸ் தனது பதிலடி பரிகாசத்துக்கு பயன்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ’மக்களவையில் பாஜக எதிர்பார்க்கும் இடங்களை இழந்ததற்கு பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், “அவர் தன்னை அசாதாரணமானவர் என்று காட்டிக் கொண்டார். தற்போது பதவி விலகும் முன்னாள் பிரதமர் ஆகப் போகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. தார்மீகப் பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் இந்தத் தேர்தலின் செய்தி" என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in