மீண்டும் இந்தியா கூட்டணியில் நிதிஷ் குமார்? - பிரதமர் கனவை ஈடேற்றுமா அடுத்த பல்டி?

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

அறுதிப் பெரும்பான்மைக்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓட்டையிடும் காங்கிரஸ் தலைவர்களின் முயற்சியில் சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்தபடியாக நிதிஷ் குமாரும் சிக்கியுள்ளார். இந்த முயற்சி பலிதமானால் நிதிஷ் குமாரின் பிரதமர் கனவும் பலிக்க வாய்ப்பாகலாம்.

ஆட்சி அமைப்பதற்கான 272 தொகுதிகளைத் தாண்டி 300 என்றளவில் முன்னிலையை தொட்டு வருகிறது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 230 சொச்ச இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. எனினும் முந்தைய மக்களவைத் தேர்தலின் வெற்றிவாய்ப்புகளோடு ஒப்பிடுகையில் தேஜகூ சுமார் 50 இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளது. மாறாக இந்தியா கூட்டணி 100க்கும் மேலான இடங்களில் முன்னிலையை தொடர்ந்து வருகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

தற்போதுள்ள முன்னிலை நிலரங்களே இறுதி நிலவரமாக வளரும் என்றால் பாஜக கூட்டணி ஆட்சியமைப்பது எளிதாகும். ஆனால் அதற்கு போட்டியாக வளர்ந்திருக்கும் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியமைக்க உரிமை கோரலாம். அந்த வகையில் பாஜக கூட்டணியில் உள்ள தனது முன்னாள் சகாக்களுக்கு காங்கிரஸ் தலைமை தூது அனுப்பியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து அதன் தோழமை கட்சிகளை பிரிப்பதன் மூலம், தேஜகூ பலத்தை சரிக்க முடியும். கூடவே அந்த கட்சிகளை இந்தியா கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முயலாலாம்.

தேஜகூ அங்கத்தினரான தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவை இந்த வகையில் காங்கிரஸ் தலைமை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்திக்கொண்ட பிரதமர் மோடி சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பகிர்ந்திருக்கிறார். ஆனபோதும் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்து சரத் பவாரிடம் சந்திரபாபு நாயுடு நல்லபடியாக பேசி வருகிறார். இரு கூட்டணிகளில் எப்பக்கம் சாய்வது என்ற இறுதி முடிவு சந்திரபாபு நாயுடு கையில் உள்ளது. சந்திரபாபு நாயுடுவுடன் காங்கிரஸ் பேசுவது பகிரங்கமானபோதும், நிதிஷ் குமாருடனான காங்கிரஸ் பேச்சுவார்த்தை திரைமறைவில் தொடர்வதாக சொல்லப்படுகிறது.

பாஜக மூன்றாம் முறையாக ஆட்சியில் அமர்வதை தடுக்கும் நோக்கிலான இந்தியா கூட்டணியை கட்டமைத்தவர் பீகார் முதல்வரான நிதிஷ் குமார். தனது கட்சியை கரைக்க பாஜக முயல்வதாக எழுந்த அதிருப்தியில் அவர் பீகார் கூட்டணியை உடைத்துக்கொண்டு தேஜஸ்வி யாதவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். பின்னர் இந்தியா கூட்டணியை நிர்மாணித்தவர், காங்கிரஸ் தலைவர்களுடனான முரண்பாட்டில் அங்கிருந்து மீண்டும் பாஜகவுக்கு தாவினார்.

இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட நிதிஷ் குமாரின் கோரிக்கைகளை காங்கிரஸ் கண்டுகொள்ளாததே இந்த தாவலுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னரான காலத்தில் பீகாரின் பாஜக அமைச்சர்கள் மற்றும் ஆளுநரின் தலையீடு காரணமாக நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நிதிஷ் வேறு முடிவெடுப்பார் என்றும் தேஜஸ்வி யாதவ் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

நிதிஷ்குமார் -, சந்திரபாபு நாயுடு
நிதிஷ்குமார் -, சந்திரபாபு நாயுடு

இந்த நிலையில் வாக்கு எண்ணும்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக மோடியை சந்தித்து நிதிஷ் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை விவரங்கள் வெளியாகதபோதும், பாஜகவினர் தலையீடு தொடர்பான தனது அதிருப்தியை முறையிடவே நிதிஷ் முயற்சித்தார் என பீகார் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சூழலில் பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு மட்டுமன்றி நிதிஷ் குமாரையும் இந்தியா கூட்டணிக்கு இழுக்க காங்கிரஸ் முயல்கிறது.

பீகார் முதல்வர் நாற்காலியில் நீண்ட காலம் அமர்ந்த சாதனையை படைத்திருப்பவர் நிதிஷ் குமார். அடுத்தபடியாக பிரதமர் நாற்காலியில் கண்வைத்திருக்கும் அவர், வருடத்துக்கொரு பிரதமர் என்ற இந்தியா கூட்டணியின் திட்டத்துக்கு உடன்பட்டால் தனது அடுத்த பல்டியை உறுதி செய்வார். மேலும், பாஜகவின் அசுர பலத்தை கண்டு எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி கூட்டணி கட்சிகளும் அஞ்சி வருவதால், காங்கிரஸ் தலைவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு எழுந்துள்ளது. ஆனால் பல்டி குமாராக அறியப்படும் நிதிஷ் குமாரின் புதிய பல்டியால் அவரது பிரதமர் கனவு ஈடேறுவது கேள்விக்குறியே!

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in