திமுக தேர்தல் விளம்பர வழக்கு... தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தேர்தல் விளம்பரம் தொடர்பாக புதிய விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைதான் அணுக வேண்டும் என்ற உத்தரவு நகலை நாளை சமர்பிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தலில் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் "இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்" என்ற விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. திமுகவின் தேர்தல் விளம்பரம் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதாக கூறி ஏப்.4 ம் தேதி அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக சார்பில் அமைப்புச் செயலாற் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆர்.எஸ். பாரதி
ஆர்.எஸ். பாரதி

அந்த மனுவில், 'தேர்தல் விளம்பரங்களுக்கு மார்ச் 2023 புதிய விதிமுறைகளின் படி மாநில சரிபார்ப்பு குழு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி மறுக்கப்படுவதாக இருந்தால், அந்த விளம்பரங்கள் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்துவது, சமூகம் தொடர்பானதாக இருந்தால் அனுமதி மறுக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையர் உரிய விளக்கம் அளிக்காமல் அனுமதி மறுத்துள்ளது. அதனால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து விளம்பரத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிகள் முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், "தேர்தல் விளம்பரங்களை முறைப்படுத்த எந்த விதிகளும் இல்லை எனக் கூறி, தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என 2004 ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நீடிக்கிறது என கூற முடியாது. அதன்பின் 2023ம் ஆண்டு ஆகஸ்ட்டில் விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மேல் முறையீடு செய்வதற்கு எந்த வழிவகையும் செய்யவில்லை" என்று வாதிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், "கேபிள் டிவி ஒழுங்குமுறை விதிகளின்படி தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என உத்தரவிட்டுள்ளது. வேறு எந்த நீதிமன்றமும், தீர்ப்பாயமும் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த உத்தரவு நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த உத்தரவு 2004 ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது" எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகல் எங்கே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு நகல் இல்லை எனவும், உச்ச நீதிமன்ற இணைய தளத்திலும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகலை நாளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in