12 தொகுதிகளில் 1 லட்சம் வாக்குகள்; 6 தொகுதிகளில் 3ம் இடம் - அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகுமா நாம் தமிழர்?

சீமான்
சீமான்

மக்களவைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 12 தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக பெற்றுள்ளது. சுமார் 8 சதவீத வாக்குகளை அக்கட்சி நெருங்கியுள்ளதால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. பாஜக கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக, ஓபிஎஸ், ஐஜேகே போன்ற கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

சீமான் பிரச்சாரம்
சீமான் பிரச்சாரம்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை வெளியானது முதல் திமுக கூட்டணியின் கைகள் ஓங்கியிருந்தன. அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக கட்சிகள் சில நேரங்களில் முன்னிலை வகித்தாலும், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி 2ம் இடத்தை பிடித்துள்ளது. பாஜக 10 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் 4ம் இடமும், சில தொகுதிகளில் 3ம் இடமும் பிடித்துள்ளனர்.

சீமான் - வித்யா ராணி
சீமான் - வித்யா ராணி

நாம் தமிழர் கட்சி 12 மக்களவைத் தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக வாங்கியுள்ளனர். அந்த கட்சி போட்டியிட்ட சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர் ஆகிய 12 தொகுதிகளில் தலா ஒரு லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக சிவகங்கை தொகுதியில் 1,63,412 வாக்குகளைப் பெற்றுள்ளது.

அதேபோல 6 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ம் இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகை, திருச்சி மற்றும் புதுச்சேரியில் நாதக 3ம் இடத்தில் உள்ளது. அதேபோல இடைத்தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் நாதக 3ம் இடம் பிடித்தது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறுவதற்கு குறைந்தது 8 சதவீத வாக்குகள் தேவைப்படும் நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில் அந்த எண்ணிக்கையை பெற்றுவிட்டதாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர். முழுமையாக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நாம் தமிழர் கட்சியின் இறுதியான வாக்கு சதவீதம் தெரியவரும்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in