வாரத்தில் ஒருநாள் ஆடைகளை அயர்ன் செய்ய வேண்டாமே... காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் சிறு முயற்சி

ஆடைகள் சலவை
ஆடைகள் சலவை

காலநிலை மாற்றத்துக்கு எதிரான போரில் சிறு முயற்சியாக வாரத்தில் ஒரு நாள் தங்கள் ஆடைகளை அயர்ன் செய்யாது அணியும் போக்கு தலைநகர் டெல்லியில் புதிய அலையாய் பரவி வருகிறது.

விரும்பும் இலக்கை அடைய எவ்வளவு நீண்ட தொலைவை கடந்தாக வேண்டுமெனிலும், அதனை நோக்கிய பயணம் என்பது தொடர்ச்சியாக சிறு அடிகளை முன்வைப்பதன் மூலமே சாத்தியமாகும். இந்த நீண்ட பயணத்தில் முன்னோக்கி வைக்கப்படும் சிறு அடியும் முக்கியமானது. பூமியின் அழிவுக்கு அச்சாரமிடும் காலநிலை மாற்றம் என்னும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதிலும், இப்படியான சிறு நகர்வுகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அயர்ன் செய்த ஆடைகள்
அயர்ன் செய்த ஆடைகள்

இந்த சிறு அடிகளில் ஒன்றாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் எனப்படும் சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஊழியர்கள், திங்கள் கிழமை தோறும் அயர்ன் செய்யாத ஆடைகளை உடுத்தி பணிக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் இந்த முயற்சிக்கு பொதுவெளியில் கிடைத்த ஆதரவால், படிப்படியாக இந்த முன்னெடுப்பு மக்கள் மத்தியிலும் வெற்றிகரமாக பரவி வருகிறது. இந்த முயற்சியின் வாயிலாக திங்கள் தோறும் சுமர் 1,25,000 கிலோ கரியமில வாயு வெளியேற்றத்தை தவிர்க்க முடிந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஊழியர்கள் சலவை செய்யப்பட்ட ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வலியுறுத்தி, அதன் தலைமையகத்தால் சுற்றறிக்கை அல்லது அதிகாரப்பூர்வ உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்றபோதும், பணியாளர்கள் மத்தியிலான தன்னிச்சையான முயற்சி வெற்றி கண்டிருக்கிறது. ஏப்ரல் 23 அன்று புவி தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஐஐடி-பம்பாய் உயர்கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேத்தன் சோலங்கி என்பவர், டெல்லியிலுள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் காலநிலை கடிகாரத்தை நிறுவிய பிறகு இந்த விழிப்புணர்வு அங்கே மேலும் அதிகரித்துள்ளது.

'ரிங்கிள்ஸ் அச்சே ஹை' என்று இந்தியில் அமைந்த முழக்கத்தின் வாயிலாக, ஆற்றலைச் சேமிப்பது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவது போன்றவற்றை, அனைவருக்கும் நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ’திங்கள் தோறும் அயர்ன் செய்யப்படாத ஆடைகளை உடுத்தும்’ போக்கு புதிய பாணியாக பரவி வருகிறது.

’ரிங்கிள்ஸ் அச்சே ஹை'
’ரிங்கிள்ஸ் அச்சே ஹை'

எனர்ஜி ஸ்வராஜ் இயக்கத்தின் நிறுவனர் சேத்தன் சிங் சோலங்கி கூறுகையில், ”காலநிலை மாற்றத்திற்கான எளிய தீர்வுகளில் ஒன்று 'எதையவது செய்யாது' இருப்பதன் மூலமும் சாத்தியமாகும். எங்களது ’ரிங்கிள்ஸ் அச்சே ஹை' (WAH-Wrinkles Acche Hai) பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. இதில், திங்கள்கிழமை அயர்ன் செய்யாத ஆடைகளை அணியுமாறு கேட்டுக்கொள்வதில் தொடங்கியிருக்கிறோம். அடுத்தக்கட்டமாக பலவற்றிலும் அவற்றைத் தொடர உத்தேசித்திருக்கிறோம்' என்றார். ஒரு ஜோடி ஆடையை அயர்ன் செய்யாமல் அணிவதன் மூலம், 200 கிராம் கார்பன் வெளியேற்றத்தை சேமிக்க முடியுமாம்.

"இதையே மில்லியன் கணக்கானவர்கள் செய்யும்போது, ​​மிகப்பெரிய கார்பன் உமிழ்வு சேமிப்பு சாத்தியமாகிறது. தற்போது ஒவ்வொரு திங்கட்கிழமையும் 6,25,000 பேர் இந்த விழிப்புணர்வில் இணைகின்றனர். அவ்வாறு திங்கள்தோறும் கிட்டத்தட்ட 1,25,000 கிலோ கார்பன் உமிழ்வைச் சேமிக்கிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 1 கோடிக்கும் அதிகமானோர் இந்த திங்கள் பிரச்சாரத்தில் சேர வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறோம்'' என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in