நீட் தேர்வில் பாரபட்சம்... தமிழக மாணவர்கள் புறக்கணிப்பு; வலுக்கும் கண்டனங்கள்!

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது முதலே தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆரம்பம் முதலே தமிழக மாணவர்கள் நீட் தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குரல்கள் ஒலித்து வருகின்றன.

தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளை பரிசோதனை என்கிற பெயரில் சங்கடத்திற்குள்ளாக்குவது, பல இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகள் முதற்கொண்டு சோதனையிடுவது, கம்மல், மூக்குத்தி போன்றவைகளை கழற்ற சொல்வது என்று சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற நீட் தேர்வின் போது ராஜஸ்தானில் வினாத்தாள் விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பத்தில், ராஜஸ்தானில் மட்டும் குறிப்பிட்ட 120 மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை, தமிழ்நாட்டு மாணவர்களை கண்டு கொள்ளாமல் துரோகம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு (நீட்) கடந்த ஞாயிறன்று  நாடு முழுவதும் நடைபெற்றது. தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் நீட் தேர்வு குறித்து குழப்ப நிலை நீடித்தது. பல இடங்களில் ஒரே பெயரில் இரு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் கடைசி நேரத்தில் குழப்பமடைந்தனர். பர்தாவுடன் தேர்வெழுத சென்ற இயக்குநர் அமீரின் மகள், பர்தாவுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வெழுதாமல் திரும்பி சென்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மையத்தில், இந்தி மொழியில் தேர்வெழுத வந்திருந்த மாணவர்களுக்கு வினாத்தாள் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டிருந்தது. அதே போன்று தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் சர்ச்சைக்குள்ளானது. அதில், ராஜஸ்தானில் உடனடியாக 120 மாணவர்களுக்கும் மறுத்தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகவை தமிழ்நாடு மாணவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்

ராஜஸ்தானில் சவாய் மாதோபூரில் உள்ள ஆதர்ஷ் வித்யா மந்திர் மாண்டவுன் தேர்வு மையத்தில் பங்கேற்ற தேர்வர்களில் சிலருக்கு, இந்தி மீடியம் வினாத்தாளுக்கு பதிலாக ஆங்கில மீடியம் வினாத்தாள் வழங்கப்பட்டது. அதேபோல் ஆங்கில மீடியம் தேர்வர்களுக்கு இந்தி மீடியம் வினாத்தாள் வழங்கப்பட்டது.
இதனால் தேர்வு மையத்தில் குழப்பம் ஏற்பட்டது.

மீடியம் வாரியாக வினாத்தாளை பிரித்துக் கொடுப்பதற்கு பதிலாக, மாற்றி மாற்றி வினாத்தாளை கொடுத்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தும் கோபமடைந்த மாணவர்கள் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். உரிய நேரத்தில் தேர்வு எழுத முடியாததால், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

மீடியம் குழப்பத்தால் பாதிக்கப்பட்ட 120 தேர்வர்களுக்கு உடனடியாக மறுத்தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதையடுத்து மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை அதே மையத்தில் மறுதேர்வு நடைபெற்றது. உரிய வினாத்தாள் வழங்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் மறுபடியும் தேர்வு எழுதினர். 

இதே போல தமிழ்நாட்டில்  தூத்துக்குடி மாவட்டம் அழகர் பள்ளியில் 768 மாணவ, மாணவிகள்  நீட் தேர்வை எழுதினர். இந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரண்டு விதமான வினாத்தாள்கள் வழங்கப்பட்டது.  இதில் 200 கேள்விகளும் வெவ்வேறாக இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  முதல் முறையாக 200 கேள்விகளுமே வேறாக உள்ள ஒரு வினாத்தாள் வழங்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தூத்துக்குடி மாணவர்கள்
தூத்துக்குடி மாணவர்கள்

விடைகள் அடங்கிய தொகுதி வெளியிடப்பட்ட நிலையில், இந்த மாணவர்கள் எழுதியுள்ள வினாத்தாளுக்கான விடைத் தொகுதிகள் மட்டும்  வெளியாகவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தங்களுக்கு தனியாக ரேங்கிக் வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அல்லது சரியான கேள்விகளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ராஜஸ்தான் மாணவர்களுக்கு உடனடியாக செவிமடுத்த தேசிய தேர்வு முகமை,  இதுவரை தமிழ்நாட்டு மாணவர்களுக்கான இந்த விவகாரத்தில் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதனால் கடந்த ஒரு வருட காலமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். தேசிய தேர்வு முகமையின் தவறால் தங்களின் மருத்துவக் கனவு பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், தமிழக மாணவர்களின் குற்றச்சாட்டுக்கு தேசிய தேர்வு முகமை இது வரையில் எந்த பதிலும் கூறாமல் மெளனத்து வருவது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in