கறார் காட்டிய சிரோமணி அகாலி தளம்... பஞ்சாப்பிலும் தனித்துப் போட்டியிடுகிறது பாஜக!

பிரதமர் மோடியுடன், சிரோமணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல்
பிரதமர் மோடியுடன், சிரோமணி அகாலிதளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல்

பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாஜக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முக்கிய கட்சியான சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைக்க கடந்த சில வாரங்களாக பாஜக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இம்மாநிலத்தில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரியுள்ளது. ஆனால், சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே பாஜக தனித்து போட்டியிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில பாஜக தலைவர் சுனில் ஜாகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள், விவசாயிகள் மற்றும் இந்த நாட்டின் வர்த்தகர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி செய்த அயராத பணியின் அடிப்படையில் பஞ்சாப் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும்” என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பஞ்சாபில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை தனித்து போட்டியிட உள்ள நிலையில் தற்போது பாஜகவும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சிரோமணி அகாலிதளமும் தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் அங்கு நான்கு முனை போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் மாநிலம்
பஞ்சாப் மாநிலம்

கடந்த 2020 செப்டம்பரில் மத்திய அரசு சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இச்சட்டங்கள் வட இந்தியாவில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான விவசாயிகளும் உயிரிழந்தனர். இந்த சட்டம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிரோமணி அகாலி தளம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர், 2021 நவம்பரில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன.

அதைத் தொடர்ந்து 2022ம் ஆண்டில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில், எஸ்ஏடி கூட்டணியின்றி பாஜக தனித்து போட்டியிட்டது. இதில் பாஜகவின் 6.6 சதவீதம் வாக்குகளை பெற்றது. இது கடந்த 2017 பேரவைத் தேர்தலை விட, 5.39 சதவீதத்தை காட்டிலும் ஓரளவு அதிகமாகும்.

 சிரோமணி அகாலி தளம்
சிரோமணி அகாலி தளம்

இந்நிலையில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக, சிரோமணி அகாலி தளம் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட கடந்த சில நாள்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இந்நிலையில் உடன்பாடு ஏற்படாமல் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் ஒடிசாவிலும் பிஜேடி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்தது பாஜக.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in