தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

தேச தந்தையை பாதுகாக்க, நன்கொடை தந்தை என்ன செய்வார் என பாஜகவை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்
முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து, சமீபத்தில் பதவி விலகி பாஜகவில் இணைந்தவர் அபிஜித் கங்கோபாத்யாய். இவர் அம்மாநிலத்தில், தாம்லுக் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கங்கோபாத்யாயை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேபாங்ஷு பட்டாச்சார்யா போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அபிஜித் கங்கோபாத்யாய், ஒரு டிவி சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் காந்தி, கேட்சேவை ஒப்பிட்டு ஒரு கருத்தை கூறியிருந்தார். இது தொடர்பாக அந்த பேட்டியில் அவர் மேலும் கூறுகையில், “சட்டத் தொழிலைச் சேர்ந்த ஒருவர் என்ற முறையில் கதையின் மறுபக்கத்தை நான் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அவரது (நாதுராம் கோட்சே) எழுத்துக்களை நான் படிக்க வேண்டும். மகாத்மா காந்தியைக் கொல்ல அவரைத் தூண்டியது என்ன என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும்.

மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே
மகாத்மா காந்தி, நாதுராம் கோட்சே

அதுவரை, காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையே ஒருவரை என்னால் தேர்வு செய்ய முடியாது” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை நியாயப்படுத்தும் விதமாக கொல்கத்தா நீதிபதியின் கருத்து அமைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறுகையில், "பிரதமரால் ஆசீர்வதிக்கப்பட்ட பாஜக வேட்பாளராக மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, ராஜினாமா செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி, இப்போது காந்திக்கும் கோட்சேவுக்கும் இடையே யாரையும் தேர்வு செய்ய முடியாது என கூறுவது பரிதாபகரமானது.

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மகாத்மாவின் மரபைப் பின்பற்ற எந்த முயற்சியும் எடுக்காதவர்கள் (அபிஜித் கங்கோபாத்யாய்) வேட்பு மனுவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தேசத் தந்தையைப் பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்?” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in