அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும்  இன்று ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்வதால் தூத்துக்குடி தொகுதியில் அனல் பறக்கிறது. 

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி மக்ளவைத் தொகுதி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுக வேட்பாளராக தற்போதைய மக்களவை உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். கடந்த ஐந்தாண்டு காலமாகவே அவர் தொகுதிக்குள் பல்வேறு பணிகளை செய்து வருவதால் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருக்கிறார். இந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அவர் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கு வாக்கு கேட்டு அவரது சகோதரரும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் இன்று பிரசாரம் செய்கிறார். மாலை 5 மணிக்கு எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் கனிமொழி, ராமநாதபுரம் தொகுதி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஆகியோரை ஆதரித்து அவர் அவர் பிரசாரம் செய்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதற்காக தூத்துக்குடி தொகுதி முழுவதிலிருந்து இருந்தும் திமுக தொண்டர்கள் சிந்தலக்கரைக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். மிக பிரம்மாண்டமான அளவில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல ராமநாதபுரம் தொகுதியில் இருந்தும் பேருந்துகள் மற்றும் வேன்களில் திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொண்டர்கள் சிந்தலக்கரை நோக்கி புறப்பட்டுள்ளனர். இதனால் இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் லட்சக்கணக்கான திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி எம்.பி
கனிமொழி எம்.பி

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சென்னையில் இருந்து நேற்று தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். இரவில் தூத்துக்குடி சத்யா ஓட்டலில் ஓய்வெடுத்த அவர் இன்று காலை நடைபயிற்சிக்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். முதல்வரின் வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.சிவசாமி வேலுமணியை ஆதரித்து இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி  சிதம்பரநகரில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அதிமுகவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். தொகுதி முழுவதும் உள்ள சாலைகளில் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு  எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டு வருகிறது.

இப்படி இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களும் தூத்துக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொள்வதால் அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. இதன் காரணமாக இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் உற்சாகத்தில் வலம் வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in