‘இனி இதுபோல நடக்காது...’ இந்திய பிரதமர் மோடியை இழிவுபடுத்திய விவகாரத்தில் மாலத்தீவு அமைச்சர் உறுதி

மாலத்தீவு
மாலத்தீவு

இந்திய பிரதமர் மோடியை இழிவுபடுத்திய மாலத்தீவு அமைச்சர்கள் விவகாரத்தில், ‘இனி அதுபோல நடக்காது’ என மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் மூசா ஜமீர், தனது இன்றைய இந்திய விஜயத்தின்போது பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் மோடியை இழிவுபடுத்தியதில், இந்தியா - மாலத்தீவு இடையே சுமூகம் கெடவும், இரதரப்பு உறவுகள் பாதிப்பால் மாலத்தீவு சுற்றுலாத்துறை அடிவாங்கவும் வாய்ப்பானது. தற்போது மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சரான மூசா ஜமீர், தனது முதல் அதிகாரபூர்வ இந்திய விஜயத்தின்போது, சுமூகம் இழந்திருக்கும் இருதரப்பு உறவை சரி செய்ய முயன்றார்.

மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி
மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு - இந்திய பிரதமர் நரேந்திர மோடி

’பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் கூறிய இழிவான கருத்துக்களை, தங்களது முகமது முய்சு அரசு ஆதரிக்கவில்லை’ என்றும் அப்போது அவர் தெளிவுபடுத்தினார். இந்த கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்தவில்லை என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், “அது எந்த வகையிலும் மாலத்தீவு அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல. குறிப்பாக அவ்வாறு நிகழ்ந்திருக்கக் கூடாது என்றே நாங்களும் நம்புகிறோம். இது மீண்டும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். சமூக வலைதளங்களில் தவறான புரிதல் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை மாலத்தீவு மற்றும் இந்திய அரசாங்கங்கள் புரிந்து கொண்டன. தற்போது அந்த நிலையை நாங்கள் கடந்துவிட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில், 3 மாலத்தீவு அமைச்சர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக அவமரியாதையான கருத்துக்களை தெரிவித்ததால், இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையே மோதல் தொடங்கியது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மஹ்சூம் மஜித் மற்றும் மல்ஷா ஷரீப் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், மாலத்தீவு செய்தி நிறுவனங்களின் தரவுகளின்படி, அவர்கள் மூவரும் தொடர்ந்து அமைச்சர் பொறுப்புக்கான ஊதியத்தை பெற்றே வருகின்றனர்.

மாலத்தீவு - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள்;  மூசா ஜமீர் - ஜெய்சங்கர்
மாலத்தீவு - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள்; மூசா ஜமீர் - ஜெய்சங்கர்

மாலத்தீவுக்கு என திட்டமிட்ட சுற்றுலாப் பயணங்களை, அந்நாட்டு அமைச்சர்களின் வாய்த்துடுக்கு காரணமாக, இந்தியர்கள் பெருமளவில் ரத்து செய்தனர். அந்தப் போக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் பிரச்சார உத்தியாக வளர்ந்தது. இதனால் மாலத்தீவின் பொருளாதாரத்துக்கு ஆதாரமான சுற்றுலா பெருத்த அடிவாங்கியது. மாலத்தீவுக்கு சுற்றுலா செல்லும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா வெகுவாக சறுக்கி விழுந்தது. இன்னொரு பக்கம் சுற்றுலா பயணிகளை கோரி சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட மாலத்தீவு அதிபருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனையடுத்து இந்தியாவிடம் மாலத்தீவு ஆட்சியாளர்கள் சரணடைந்தனர். அந்த வகையில் மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சரின் இன்றைய அதிகாரபூர்வ இந்திய விவகாரமும் அமைந்தது. அப்போது, மாலத்தீவு - இந்தியா இடையிலான நல்லிணக்க உறவுகளை நினைவு கூர்ந்த மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர், ’மாலத்தீவு சுதந்திரம் அடைந்தபோது அதனை அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று’ என்று நெக்குருகினார். தனது இந்திய விஜயத்தை அடுத்து, இந்தியா - மாலத்தீவு இடையிலான சுமூகம் மேம்படவும், மாலத்தீவுக்கான இந்திய சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மாலத்தீவு அமைச்சர் மூசா ஜமீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in