வீட்டில் மினி தேர்தல் அருங்காட்சியகம்; ஐ.டி. நிறுவனரின் அசத்தல் முயற்சி... குவியும் பாராட்டுக்கள்!

தேர்தல் நினைவு சின்னங்களுடன் ஐ,டி. நிறுவனர் விகாஸ்
தேர்தல் நினைவு சின்னங்களுடன் ஐ,டி. நிறுவனர் விகாஸ்

கேரளாவில் தனது வீட்டில் மினி தேர்தல் அருங்காட்சியகத்தை உருவாக்கியுள்ள விகாஸ் என்ற ஐ.டி. நிறுவனம் நடத்தி வரும் இளைஞர் மக்களிடையே கவனம் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு, நடக்காவைச் சேர்ந்தவர் கே.விகாஸ் (46). இவர் சொந்தமாக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் விகாஸ், தனது வீட்டை மினி தேர்தல் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார். தேர்தல் தொடர்பான வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்தும் ஆர்வத்தில் இந்த முயற்சியில் விகாஸ் இறங்கியுள்ளார்.

விகாஸ் சேகரித்து வைத்துள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள்
விகாஸ் சேகரித்து வைத்துள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள்

இவர், பல்வேறு காலகட்ட வாக்குப்பெட்டிகள், பிரச்சார துண்டறிக்கைகள், பல்வேறு அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்ற தேர்தல் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்துள்ளார். இத்தகவலை அறிந்தவர்கள் விகாஸின் மினி தேர்தல் அருங்காட்சியகத்தை பார்வையிட அவரது வீட்டிற்கு படையெடுத்து வருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளாக இவ்வாறு தேர்தல் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் விகாஸ், இது தொடர்பாக கூறுகையில், “பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்குப்பெட்டிகள், மெகா போன்கள், ஒலிபெருக்கிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் முத்திரைகள் போன்றவற்றை சேகரித்து வைத்துள்ளேன்.

வாக்கு பெட்டிகள் (கோப்பு படம்)
வாக்கு பெட்டிகள் (கோப்பு படம்)

தமிழ்நாட்டில் ஒரு கண்காட்சியில் ஆல்வின் நிறுவனம் தயாரித்த வாக்குப்பெட்டியை நான் கண்டேன். அப்போது ஏற்பட்ட தூண்டுதலில் அதனை வாங்கினேன். பின்னர், மலப்புரத்தில் 1960ல் தயாரிக்கப்பட்ட மற்றொரு வாக்குப் பெட்டியை வாங்கினேன். தாமராசேரியில் காங்கிரஸ் கட்சி தொண்டராக இருந்த எனது தாத்தாவிடமும் ஒரு பழங்கால வாக்குப்பெட்டி இருப்பதை அறிந்து அவற்றையும் சேகரித்தேன்.

முன்பு தேர்தல் பிரச்சாரத்துக்கு துண்டு பிரசுரங்கள் அச்சிட மர அச்சுகள் பயன்படுத்தப்பட்டன. கோழிக்கோட்டில் உள்ள அச்சகங்களில் இருந்து தேர்தல் துண்டறிக்கை அச்சிட தயாரிக்கப்பட்ட மர அச்சுகளை சேகரித்து வைத்துள்ளேன்.

தேர்தல் பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம்

முன்பெல்லாம் அரசியல் கட்சிகள், பாடல்களை சிறு புத்தகங்களாக அச்சிட்டு அவற்றை தொண்டர்களுக்கு வழங்கும். அவற்றை தெரு நாடகங்கள், பொதுக்கூட்டங்களில் கலைஞர்கள் பாடி வாக்கு சேகரிப்பர். தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமங்களை தேர்தல் வரலாற்றின் வழியே பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in