கர்நாடகாவை அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்... பிரஜ்வல் வழக்கை சிபிஐ விசாரிக்க வாய்ப்பு உள்ளதா?

பிரஜ்வல் ரேவண்ணா
பிரஜ்வல் ரேவண்ணா

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கின் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கர்நாடகா மாநிலம், ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் 3 பெண்கள் அளித்த புகாரின் பேரில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா (66) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எச்.டி.தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (இடது)
எச்.டி.தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (இடது)

எச்.டி.தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பியோடிய நிலையில், அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் ம.ஜ.த. தலைவருமான குமாரசாமி கூறும்போது, ‘‘ஆபாச வீடியோக்கள் அடங்கிய 25 ஆயிரம் பென் டிரைவ்களை காங்கிரஸார் கர்நாடகா முழுவதும் விநியோகித்துள்ளனர். வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி அதனை பரப்பியுள்ளனர். கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கமானவர்கள் இதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்'' என கோரினார்.

குமாரசாமி பிரஜ்வல் ரேவண்ணா
குமாரசாமி பிரஜ்வல் ரேவண்ணா

இதே கோரிக்கையை ஹாசன் தொகுதி பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவும் வலியுறுத்தியுள்ளார். மாநில அரசு அமைத்த எஸ்ஐடி மீது நம்பிக்கையில்லை என்று குமாரசாமி, தேவராஜ் கவுடா கூறியுள்ளனர். மேலும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என்றும் கூறியுளளனர்.

இந்த நிலையில், பென்டிரைவ் மூலம் பிரஜ்வல் ரேவண்ணாவின் சூபாச வீடியோவை வைரலாக்கியவர்களுக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று டெல்லி சென்று மத்திய அரசிடம் குமாரசாமி முறையிட முடிவு செய்துள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

கர்நாடகா பென் டிரைவ் வழக்கில் காங்கிரஸ் செல்வாக்கு மிக்க தலைவர்களின் கைவரிசை இருப்பதாக குற்றம்சாட்டி வரும் குமாரசாமி, விரைவில் டெல்லி சென்று செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளார். பிரஜ்வல் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அந்த வீடியோவை வைரலாக்கி, பல்லாயிரக்கணக்கான பெண்களை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆபாச வீடியோ வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றால், தற்போது இரண்டு வழிகள் உள்ளன. சிபிஐ விசாரணைக்கு மாநில அரசே பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையெனில் உயர் நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இது தவிர தன்னிச்சையாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி இல்லை. எப்படியும் மாநில அரசு எஸ்ஐடி அமைத்திருப்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடாது.

சிபிஐ
சிபிஐ

எனவே, பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்களின் முன் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதாவது உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். எஸ்ஐடி மூலம் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். தற்போது எஸ்ஐடி அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதையும் உயர் நீதிமன்றம் நம்ப வைக்க வேண்டும். அப்போது உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், ‘‘சிறப்பு புலனாய்வு குழுவினர் சுதந்திரமாக விசாரிக்கின்றனர். எனவே இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படாது'' என்று கறாராக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். எனவே, பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது தான் இவ்வழக்கின் முன் உள்ள கேள்வியாக உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in