82 வயது மனைவியை விவாகரத்து செய்ய துடித்த 89 வயது கணவர்... குட்டு வைத்து வழக்கை முடித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

82 வயது மனைவியை விவாகரத்து செய்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்ற 89 வயது கணவருக்கு குட்டு வைத்து வழக்கை முடித்து அனுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 27 வருடங்களாக இழுத்தடித்த விவாகரத்து வழக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்ததிருக்கிறது.

வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவில் இன்னமும் விவாகரத்து என்பது சமூகத்தால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் வேண்டா வெறுப்பாக இல்லறத்தை தொடருவோர் இங்கே நிறைய இருக்கின்றனர். இதன் காரணமாக இங்கே திருமண வேலிக்கு வெளியே எகிறுவோரும், அது தொடர்பான கள்ளக்காதல் முதல் கொலை களேபரங்களும் அரங்கேறுகின்றன.

இந்தியாவில் சுமார் 100 திருமணங்களில் ஒன்று மட்டுமே விவாகரத்தில் முடிகிறது. சமூக அழுத்தத்தின் காரணமாக மகிழ்ச்சியற்ற திருமணங்களே நம் சமூகத்தில் நிறைந்திருக்கின்றன. அப்படி தனது திருமண வாழ்வில் மகிழ்ச்சி கிட்டவில்லை என 27 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து வழக்கு தொடர்ந்தார் நிர்மல் சிங் பனேசர். 27 வருடங்களாக இழுத்தடித்த அந்த வழக்கு, நிர்மலின் 89வது வயதில் தோல்வியை தந்திருக்கிறது.

தம்பதி
தம்பதி

நிர்மல் சிங் பனேசர் பரம்ஜித் கவுர் பனேசர் இடையே 1963ல் திருமணம் ஆனது. இந்திய விமானப்படையில் பணிபுரிந்த நிர்மல், மாற்றலாகி செல்லும் ஊர்களுக்கு எல்லாம் உடன் வர மறுத்த மனைவியோடு முதல் பிணக்கு முளைத்தது. 1984ல் மனைவியை விவாகரத்து செய்வது என முடிவு செய்தார். 1996ல் அதற்கான வழக்கைத் தொடர்ந்தார்.

2000வது ஆண்டில் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து அளித்தது. ஆனால் மனைவியின் மேல்முறையீடு காரணமாக அதே ஆண்டில் அந்த விவாகரத்து ரத்தானது. இப்படியே மேல்முறையீடுகளின் வழியே விவாகரத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தை எட்டியபோது, கணவன் மனைவி இருவரும் 80 வயதை கடந்திருந்தனர். 27 வருட விவாகரத்து வழக்கில் இருவருமே தங்களுக்கான நீதி கிடைக்கும் என காத்திருந்தனர்.

நிர்மல் கோரிய விவாகரத்தினை வழங்க நீதிமன்றம் தயாராக இருந்தது. ஆனால், ’விவாகரத்து பெற்றவள் என்ற இழிவுடன் நான் இறக்க விரும்பவில்லை’ என 82 வயது மூதாட்டியான பரம்ஜித் நீதிமன்ற வளாகத்தில் கதறியபோது வழக்கின் பாதை மாறியது. விவாகரத்துக்கு விடாப்பிடியாக நிற்கும் கணவரை இன்னும் தான் நேசிப்பதாகவும், வயதான காலத்தில் கணவருடன் காலத்தை கழிக்க விரும்புவதாகவும், வயோதிக கணவரை கவனித்துக்கொள்ள விரும்புவதாகவும் அந்த மூதாட்டி கோரிக்கை வைத்தபோது நீதிபதிகள் கலங்கிப்போனார்கள்.

வயதான தம்பதி
வயதான தம்பதி

இறுதியாக ’விவாகரத்து வழங்குவது பரம்ஜித் கவுருக்கு செய்யும் அநீதி’ என தீர்ப்பு வழங்கினார்கள். இந்திய சமூகத்தில் திருமணம் என்ற நிறுவனத்தின் மதிப்பு குறித்தும், ஆன்மிகமும், பாரம்பரியமும் கலந்த அந்த உறவின் புனிதம் குறித்தும் பக்கம்பக்கமாய் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் வாசித்தார்கள்.

திருமணமாகி 3 குழந்தைகள், பின்னர் பேரக்குழந்தைகள், கொள்ளுப்பெயரன் பெயர்த்தி கண்டிருக்கும் நிர்மல் - பரம்ஜித் ஜோடியை 27 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சேர்த்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மனைவியின் கண்ணீரிலும், நீதிபதிகளின் அறிவுரையிலும் 89 வயதில் பாடம் கற்றிருக்கிறார் நிர்மல்.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in