ஒருநாளைக்கு இரண்டே ரொட்டித் துண்டுகள்தான் உணவு; தண்ணீரின்றி தவிப்பு - காசாவின் பரிதாபம்!

ஒருநாளைக்கு இரண்டே ரொட்டித் துண்டுகள்தான் உணவு; தண்ணீரின்றி தவிப்பு - காசாவின் பரிதாபம்!

காசாவில் வாழும் பாலஸ்தீனர்களின் ஒரு நாளுக்கான சராசரி உணவு என்பது வெறும் 2 ரொட்டித் துண்டுகள் மட்டுமே எனவும், மக்கள் தண்ணீரின்றி தவிப்பதாகவும் ஐநா உறுப்பினர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய அதிரடி தாக்குதலை அடுத்து அங்கே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் காசா மீது இடைவிடாது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், எரிபொருள், குடிநீர், உணவு, மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை என எதுவும் காசா மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்தது. நிவாரண உதவிகளும் காசாவிற்குள் வராத வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து 25 நாட்களுக்கு பிறகு காசா - எகிப்து இடையே உள்ள எல்லை திறக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் எல்லையில் குவிந்து படிப்படியாக வெளியேறி வந்த வண்ணம் உள்ளனர். காயமடைந்த பாலஸ்தீனியர்களும் காசாவில் இருந்து வெளியேறி எகிப்தில் சிகிச்சை பெற தொடங்கினர். நிவாரண பொருட்களும் காசாவிற்குள் கொண்டுசெல்லப்பட்டு வருகின்றன. ஆனால் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்யாததால் எல்லை திறக்கப்பட்டும் கத்தி மேல் நடக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 193 நாடுகளின் ஐ.நா முகவர்களுடனான காணொலி கூட்டம் நடைபெற்றது அப்போது ஐக்கிய நாடுகள் முகமையின் இயக்குநர் தாமஸ் ஓயிட் பேசும்போது, '' காசா முழுவதும் இறப்பும் அழிவுமே காணக் கிடைக்கிறது. மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பான இடமில்லை, தங்களின் வாழ்வு, உணவு, எதிர்காலம் குறித்து அவர்கள் பயத்தில் உள்ளனர். காசாவின் 17 லட்சம் மக்களுக்கும் உணவு வழங்கும் நோக்கில் 89 பேக்கரிகளுக்கு ஐநா முகமை உதவி அளித்து வருகிறது.

தண்ணீருக்கான தேவை அத்தியாவசியமாக உள்ள நிலையில் மக்கள் உப்புத்தன்மை கொண்ட நீரையும், நிலத்தடி நீரையும் பயன்படுத்தி வருகிறார்கள். குடிநீர்ப் பற்றாக்குறையை உடனடியாக சரிசெய்ய எரிபொருள் வேண்டியதாகவுள்ளது. ஐநாவின் 149 முகாம்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்துள்ளனர். போர் தீவிரமடைந்து வரும் நிலையில் வடக்கில் உள்ள பல முகாம்களை இப்போது தொடர்பு கொள்ள இயலவில்லை.

அவர்கள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுப்பதற்கும் போதிய வசதிகள் முகாம்களில் இல்லை. முறையான சுகாதாரமின்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு பற்றாக்குறையைத் தாண்டி இப்போது குரல் கேட்பது தண்ணீருக்குத் தான். காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களின் ஒரு நாளுக்கான சராசரி உணவு என்பது வெறும் இரண்டு ரொட்டித் துண்டுகள் மட்டுமே' என தெரிவித்துள்ளார் .

மேலும் பாலஸ்தீனத்தின் ஐநா தூதர் ரியாத் மன்சூர், 'காஸாவின் 50 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. புரிந்து கொள்வதற்கும் விளக்குவதற்கும் அப்பாற்பட்ட நிலையில் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலை சொல்ல வருவது, இதை நிறுத்த நம்மால் என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in