இதை தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை... உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்!

சிதம்பரம் நடராஜர் கோயில்
சிதம்பரம் நடராஜர் கோயில்

சிதம்பரம்  நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனத்தை தடுக்க தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில்  உள்ள நடராஜர் திருக்கோயிலில்  சபாநாயகர் வீற்றிருக்கும் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சிதம்பர ரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில் இருந்து வந்தது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நடராஜர் ஆலயத்தில் கனகசபை மீது ஏறி வழிபட தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். 

இதற்கு பக்தர்கள் தரப்பில் பெரும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ததற்காக அங்குள்ள தீட்சிதர்களால் கண்டிக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கனகசபை மீது  பக்தர்களை அனுமதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அரசாணை பிறப்பித்தது.

இதையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள், தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில் இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன விழாவை ஒட்டி 4 நாட்கள் பக்தர்கள் கனகசபை ஏறுவதற்கு தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அறிவிப்பு பலகையை அகற்றிவிட்டு சாமி தரிசனம் செய்தனர். 

இந்நிலையில், கனகசபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஏழு முதல் பத்து பேர் வரை மட்டும் தரிசனம் செய்யும் அளவில் மட்டுமே கனகசபை உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் 300 முதல் 500 பேரை மட்டும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதிப்பது பாரபட்சமாகிவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோயிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில், பக்தர்களை அனுமதிப்பதால், வழிபாட்டு நடைமுறைகள் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் அரசாணை, உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளதாகவும், கோயிலின் வழிபாட்டு முறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்பதால், அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும், அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி, தீட்சிதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் கனகசபையிலிருந்து தரிசிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து நீதிபதிகள்,  கோயிலை நிர்வகிக்கவே உச்ச நீதிமன்றத்தால் தீட்சிதர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் கனகசபையிலிருந்து பொதுமக்கள் தரிசிப்பதால் தீட்சிதர்களின் உரிமை எப்படி பாதிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். தீட்சிதர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடாமல், அவர்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக மூன்றாவது நபரான மனுதாரர் தாக்கல் செய்த வழக்கை எவ்வாறு ஏற்க முடியும் என்றும் கேள்வி எழுப்பி, வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரம் கனகசபை தரிசனத்தை மாற்றும் அதிகாரம் தீட்சிதர்களுக்கு இல்லை என அறநிலையத்துறை சார்பில் வாதிடப்பட்டது. கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமல்ல என உயர்  தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இளம்பெண் தற்கொலை... ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள் விடிய விடிய போராட்டம்!

குட்நியூஸ்... தமிழக அரசில் 368 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிக்கவும்!

‘பாஸ்போர்ட் ஊழல்’ ஒரே நேரத்தில் 50 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!

பிரபல நகைச்சுவை நடிகர் அதிரடி கைது! திரையுலகில் பரபரப்பு!

பகீர்... காதலி வீட்டார் மயக்க மருந்து கொடுத்து சுன்னத் செய்து விட்டனர்... கதறும் காதலன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in