களைகட்டும் மங்கலதேவி கண்ணகி கோயில்... கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி!

மங்கலா தேவி கண்ணகி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மங்கலா தேவி கண்ணகி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலா தேவி கண்ணகி கோயிலில் வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

தமிழின் மிகப்பழமையான காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை சேர மன்னர் சேரன் செங்குட்டுவனின் சகோதரர் இளங்கோவடிகள் இயற்றினார். சோழ மண்ணில் பிறந்து, திருமணமாகி, பாண்டிய மண்ணில் பஞ்சம் பிழைக்க வந்து, அங்கு கணவனை இழந்த பின்னர், சேர மண்ணிற்கு சென்று தெய்வத்துள் கலந்ததாகச் சொல்லப்படும் கண்ணகியின் கதையைச் சொல்வது சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

சிலப்பதிகாரம் காப்பியம் மட்டுமல்ல, அது வரலாற்று நிகழ்வு என்ற தமிழறிஞர்களின் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக - கேரள எல்லையான தேக்கடி பெரியார் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். கண்ணகி இங்கு தான் தெய்வமானார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக மக்கள் இக்கோயிலில் சித்ரா பெளர்ணமியன்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி என்பதால், இங்கு சாமி தரிசனம் செய்ய தொடக்கம் முதலே இருமாநில வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

மங்களதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியின் அழகிய தோற்றம்
மங்களதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ள மலைப்பகுதியின் அழகிய தோற்றம்

அதன்படி இன்றும் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு மங்கலதேவி கண்ணகி கோயிலில் சாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 2.30 மணி வரை மட்டுமே கோயிலுக்குச் செல்ல அனுமதி, மாலை 5 மணிக்கு முன்பாக பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கிவிட வேண்டும், வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது கண்ணகி கோயிலில் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி இரு மாநில வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை 5 மணி முதலே ஏராளமான பக்தர்கள் பாஸ்கள் பெற்று தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இதற்காக தேனி மாவட்டத்தில் இன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in