
கோலாரில் பிறந்து 4 நாட்களேயான ஆண் குழந்தையைத் தமிழ்நாட்டிற்கு டூவீலரில் கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்ட மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை நேற்று மர்மமான முறையில் காணாமல் போனது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
அப்போது, டூவீலரில் ஒரு பெண் குழந்தையுடன் தப்பிச் செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோலார் மாவட்டம் முழுவதும் போலீஸார் அலர்ட் செய்யப்பட்டனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் ஒரு வாலிபருடன் டூவீலரில் இளம்பெண் குழந்தையுடன் சென்றது தெரிய வந்தது. அந்த பெண்ணிடம் குழந்தை குறித்து போலீஸார் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணமாக அவர் பதில் அளித்தார். அந்த டூவீலரை ஓட்டி வந்த வாலிபர், அந்தப் பெண் தன்னை தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கெஞ்சியதாகவும், குழந்தை திருட்டு குறித்து தனக்கு எந்த தகவலும் தெரியாது என்று கூறினார்.
இதையடுத்து குழந்தையைத் தங்கள் காவலில் எடுத்த போலீஸார், பிடிபட்ட பெண்ணிடம் விசாரித்த போது, 10,000 ரூபாய்க்காக குழந்தையைத் திருடியதாகக் கூறினார். ஆனால், அவர் அடிக்கடி தனது வாக்குமூலத்தை மாற்றிக் கொண்டே இருந்ததால், போலீஸார் அவர் கூறியதை நம்பவில்லை. குழந்தையை நேற்று நள்ளிரவில் அவரது தாயிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
மேலும், குழந்தையைத் திருடிய பெண்ணைக் கைது செய்ததுடன், இந்த திருட்டில் மருத்துவமனை ஊழியர்களுக்குத் தொடர்பிருக்கிறதா என விசாரித்து வருகின்றனர். அத்துடன் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் கைப்பற்றி தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த குழந்தை திருட்டில் 3 பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர். கோலார் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மற்ற குற்றவாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குழந்தை கடத்தல் சம்பவம் கோலார் மாவட்ட மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!