எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பிவிடலாம் என நினைக்கிறீர்களா... பாபா ராம்தேவ் மீது உச்சநீதிமன்றம் காட்டம்!

பதஞ்சலி தயாரிப்புகள் மற்றும் பாபா ராம்தேவ்
பதஞ்சலி தயாரிப்புகள் மற்றும் பாபா ராம்தேவ்

பதஞ்சலி மருந்துகள் தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்களை தயாரித்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதாவில் தவறான விளம்பரங்கள் வெளியிட்டது தொடர்பாக பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் ஹிமா கோஹ்லி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு பாபா ராம்தேவ் மீதான வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் பாபா ராம்தேவ் பதில் மனு தாக்கல் செய்யாததால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மார்ச் 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாபா ராம்தேவுடன், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது).
பாபா ராம்தேவுடன், பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா (இடது).

இதனை தொடர்ந்து பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் சார்பாக ஒரு பிரமாண பத்திரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரப்பட்டது. அதில், ‘பதஞ்சலியின் நோக்கம் இந்த நாட்டின் குடிமக்களை எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ அறிவுறுத்துவது மட்டுமே’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ‘ஆயுர்வேதம் மூலம் வாழ்க்கை முறை தொடர்பான மருத்துவ சிக்கலுக்கு தீர்வுகளை வழங்குவதன் மூலம், நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பின் சுமையை குறைப்பதே பதஞ்சலியின் நோக்கம்’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கடந்த நவம்பர் 2023-ல் உச்ச நீதிமன்றம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தை நவீன மருத்துவ முறைக்கு எதிரான தவறான கூற்றுகள் மற்றும் விளம்பரங்களை நிறுத்துமாறு அறிவுறுத்தி இருந்தது. பதஞ்சலி நிறுவனம் எந்த விதமான அறிக்கைகளையும் ஆதாரமற்ற கோரிக்கைகளையும் வெளியிட மாட்டோம் என்று அப்போது நீதிமன்றத்தில் உறுதி அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ”உங்களின் மன்னிப்பு எங்களுக்கு திருப்திகரமானதாக இல்லை. மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு” என்றனர். தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நடவடிக்கைக்கு தயாராக இருங்கள் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரம் மீது மத்திய ஆயுஷ் துறை இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஒரு வாரத்தில் ஆயுஷ் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் மீண்டும் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in