குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்... பேருந்து மோதி கூலித்தொழிலாளி பலியான சோகம்!

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் தனியார் பேருந்து மோதி கூலித்தொழிலாளி பலியானதை அடுத்து குடிபோதையில் இருந்த ஓட்டுநரை சக ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாநகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில், மாநகர பேருந்து நிலையம், வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் மத்திய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்து நிலையம் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. இதனால் இந்தப் பகுதி எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து
விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து

இன்று காலை பணிகளுக்கு செல்வதற்காக ஏராளமானோர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது காந்திபுரம்-காந்தி பார்க் இடையே இயக்கப்படும் தனியார் பேருந்து ஒன்று கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அந்தப் பேருந்தை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த ஒட்டுநர் திருநாவுக்கரசு என்பவர் இயக்கினார். திருநாவுக்கரசு கவனக்குறைவாக திடீரென பேருந்தை பின்னோக்கி நகரத்தியதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் இருந்த பேருந்தை கடந்து செல்ல முயன்ற ஒருவர், இரு பேருந்துகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய பேருந்தை குடிபோதையில் இயக்கிய ஓட்டுநர் திருநாவுக்கரசை தாக்கும் சக ஓட்டுநர்கள், நடத்துநர்கள்
விபத்து ஏற்படுத்திய பேருந்தை குடிபோதையில் இயக்கிய ஓட்டுநர் திருநாவுக்கரசை தாக்கும் சக ஓட்டுநர்கள், நடத்துநர்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோர் திருநாவுக்கரசை கீழே இறக்கி விசாரித்துள்ளனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததால், அவர்கள் அவரை சராமரியாக தாக்கினர். அருகில் இருந்தவர்கள் அதனை தடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காட்டூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, உயிரிழந்தவர், சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸார், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடிபோதையில் இருந்த ஓட்டுநர் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பேருந்து நிலையத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து ஒன்று, பயணிகள் மீது மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


ஐபிஎல் சூதாட்ட கும்பல் சிக்கியது: இருவர் கைது; ரூ.2.47 லட்சம் பறிமுதல்!

வாக்களித்துவிட்டு ஊர் திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம்... விபத்தில் 6 பேர் பலி!

ஒருதலைக் காதலால் கர்நாடகாவில் அடுத்த பயங்கரம்... வீடு புகுந்து இளம்பெண் குத்திக் கொலை!

காதலனுக்காக வீட்டின் உரிமையாளரை கொலை செய்த இளம்பெண்... பெங்களூருவில் பரபரப்பு!

அதிர்ச்சி... நடிகை ராக்கி சாவந்த் மருத்துவமனையில் அனுமதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in