அமித் ஷா பொதுக்கூட்டத்தில் பத்திரிக்கையாளரை தாக்கிய பாஜகவினர்... பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

மருத்துவமனையில் ராகவ் திரிவேதி
மருத்துவமனையில் ராகவ் திரிவேதி

ரேபரேலியில் நடைபெற்ற அமித் ஷா பொதுகூட்டத்தில், செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர் மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததை அடுத்து, அதற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இது தொடர்பாக புகார் அனுப்பியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பொதுக்கூட்டத்தில் ராகவ் திரிவேதி என்ற பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டார். இதற்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ’மோலிடிக்ஸ்’ என்ற செய்தி இணையதளத்தின் பத்திரிக்கையாளரான ராகவ் திரிவேதி, அமித் ஷா பொதுக்கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட பெண்களை சந்தித்து பேட்டி கண்டது விவகாரமானது.

"அமித் ஷாவின் பேரணியின் போது, ​​​​நான் பெண்களை நேர்காணல் செய்தேன், அவர்களில் பலர் தங்களுக்கு ரூ.100 வழங்கப்படும் என்று உறுதியளித்து பாஜகவினரால் அந்த கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறினார்கள்" என்ற திரிவேதி அதன் பின்னர், மேலதிக விவரங்களுக்காக உள்ளூர் பாஜக தலைவர்களை சந்தித்து பேட்டியை தொடர்ந்தார்.

அமித் ஷா
அமித் ஷா

"ஆரம்பத்தில், அவர்கள் தங்கள் தரப்பில் தவறேதும் இல்லை என்று மறுத்தார்கள். ஆனால் நான் பெண்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளேன் என்பதை அறிந்துகொண்டதும், என்னை மறைவிடத்துக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினார்கள். கேமரா பதிவுகளை நீக்குமாறும் மிரட்டினார்கள்” என்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திரிவேதி பின்னர் தெரிவித்தார்.

ஆனால் போலீசார் உட்பட அருகில் இருந்த எவருமே தனக்கு உதவவில்லை என திரிவேதி பின்னர் தெரிவித்தார். சுமார் 40க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் இருந்தபோதும் அவர்களில் ஒருவர் கூட தாக்குதலுக்கு ஆளான பத்திரிக்கையாளருக்கு உதவ முன்வரவில்லை.

திரிவேதி தாக்குதல் தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்து, பாஜகவை கடுமையாக சாடியுள்ளது காங்கிரஸ் கட்சி. "பாஜக குண்டர்களின் மிரட்டலுக்கு பத்திரிகையாளர் உடன்பட மறுத்ததால், பாஜக குண்டர்கள் அவரைக் கடத்திச் சென்றனர். மேடைக்கு பின்புறமுள்ள மறைவிட அறைக்கு அழைத்துச் சென்று மோசமாகத் தாக்கினர். அவர்கள் பத்திரிகையாளரிடமிருந்து பணத்தையும் பறித்தனர்" என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் பகிரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி போட்டியிடுவதால் ரேபரேலி தொகுதி நாட்டின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாகி இருக்கிறது. அங்கு பத்திரிக்கையாளர் திரிவேதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்திருக்கும் பிரஸ் கிளம் ஆஃப் இந்தியா அமைப்பு, ‘ஜனநாயகத்தின் 4வது தூணை காப்பாற்றும்படி’ இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது.

உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. இது பாகிஸ்தானின் 150வது இடத்தை விட மோசமான சரிவாகும். இது தவிர்த்து எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்று, "உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசத்தில், 2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியால் ஆளப்படும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் தவிப்பதாக” தெரிவித்துள்ளது. இவற்றை நிரூபணம் செய்யும் வகையில் பாஜகவினரின் ரேபரேலி செயல்பாடும் அமைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in