பிரணவ் ஜூவல்லர்ஸ் மோசடி; வாடிக்கையாளர்கள் முற்றுகை... சமாதானப்படுத்திய போலீஸ்

பிரணவ் ஜூவல்லர்ஸ் மோசடி; வாடிக்கையாளர்கள் முற்றுகை... சமாதானப்படுத்திய போலீஸ்

பிரணவ் ஜூவல்லரியில் முதலீடு செய்து பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கும்பகோணம், நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை செயல்பட்டு வந்தது. திருச்சியை சேர்ந்த மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். இந்நிறுவனம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை விளம்பரம் செய்ததை நம்பி வாடிக்கையாளர்கள் பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தமிழகத்தில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் 8 கிளைகளும் எந்த முன்னறிவிப்பின்றி மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகை சேமிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களில் பணம் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். இதில் திருச்சி மற்றும் மதுரையில் அளித்த புகாரின் அடிப்படையில், பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர்கள் மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே பிரணவ் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் மதன் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கிளைகளில் பணத்தை இழந்த பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதனை தொடர்ந்து சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் நகைக்கடை கிளையில் பணத்தை ஏமாந்த 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், "மாதம் 500 முதல் 10 ஆயிரம் வரை பல்வேறு திட்டத்தின் கீழ் பணத்தை செலுத்தி முதிர்வுத் தொகையை நகைகளாக பெற காத்திருந்த பலர் ஏமாற்றப்பட்டோம். சிலர் லட்சக்கணக்கான ரூபாயை நகை பாண்டு பத்திரங்களில் முதலீடு செய்த நிலையில் மாதம் வட்டி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர்" என்றார்.

இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், "இதுவரை 200க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது. தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால் எவ்வளவு நகை பணம் மோசடிக்குள்ளானது என்பது குறித்து கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மேலாளர் நாராயணன் என்பவரை கைது செய்யப்பட்டுள்ளார். உரிமையாளர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா தலைமறைவாக இருப்பதால் அவர்களைத் தேடி வருகிறோம்" என்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in