வங்கி அதிகாரிகள் எல்லாம் என் பாக்கெட்டில்... ரீல்விட்ட மோசடி பாமக நிர்வாகி கைது!

மோசடி வழக்கில் பாமக நிர்வாகி சாம்ராஜ் கைது
மோசடி வழக்கில் பாமக நிர்வாகி சாம்ராஜ் கைது

வங்கிகளில் தொழில் கடன் வாங்கித் தருவதாக கூறி 15க்கும் மேற்பட்டோரிடம், கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய பாமக ஒன்றிய செயலாளரை வேலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பாமக ஒன்றிய செயலாளராக இருந்து வருபவர் சாம்ராஜ். இவர் காட்பாடி மற்றும் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலரிடம் தொழில் கடன் வாங்கித் தருவதாகவும், எல்லா வங்கிகளிலும் தனக்கு உயர் அதிகாரிகளின் பழக்கம் இருப்பதாகவும் கூறிவந்துள்ளார். மேலும் தொழில் தொடங்க மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியை குறைந்த வட்டியில் 5 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை தன்னால் பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். லோன் பெற்றுக் கொடுத்தால் தனக்கு 5 சதவீத கமிஷன் தர வேண்டும் எனவும் அவர் கேட்டிருந்த நிலையில், தொழில் செய்து வரும் பலரும் கடன் ஒப்புதலான பிறகு பணம் தருவதாக கூறியுள்ளனர்.

பேர்ணாம்பட்டு காவல்நிலையம்
பேர்ணாம்பட்டு காவல்நிலையம்

இதையடுத்து வங்கிகளில் கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட கடிதங்களை கடனுக்காக காத்திருந்தவர்களிடம் சாம்ராஜ் வழங்கி உள்ளார். இதனை நம்பி சாம்ராஜுக்கு கமிஷன் தொகையை தொழில் துறையினர் வழங்கியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வங்கிக்கு பணம் வராததால் சாம்ராஜிடம் இது குறித்து கேட்டபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதோடு, பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வங்கிக்கு சென்று கேட்டபோது, சாம்ராஜ் வழங்கிய கடன் ஒப்புதல் ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து 16 பேர் தங்களிடம் 30 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கூறி பேர்ணாம்பட்டு போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் சாம்ராஜை கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in