அடுத்தடுத்து துயரம்... குழந்தை உயிரிழப்பு; மனைவி தற்கொலை- வேதனையில் உயிரை மாய்த்த கணவர்

அபிசால்மியா, ஜலபதி
அபிசால்மியா, ஜலபதி

தனது மூன்று மாத குழந்தை பலியான வேதனையில் பெண் இன்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த கொண்டதால்  சோகத்தில் காதல் கணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜலபதி ( 30).  இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல்குவாரியில்  லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஜலபதிக்கும், குமரி மாவட்டம் கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சாம் ராபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா (25) என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டது.

இன்ஜினீயரிங் படித்திருந்த அபிசால்மியாவுக்கு லாரி டிரைவர் ஜலபதியின் மீது காதல் ஏற்பட்டதால்  இருவரும் அன்பாக பேசி பழகி வந்தனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தது.  அவர்கள் இதனை ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் காதலில் தீவிரமாக இருந்த அபிசால்மியா கடந்த 2021-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.  காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவரும் திருமண வயது உடையவர்கள் என்பதால் அவர்களை அவர்களின் விருப்பப்படி சேர்ந்து வாழுமாறு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த  குழந்தைக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து  சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குழந்தை உயிரிழந்தது.

குழந்தை இறந்ததால் வேதனை அடைந்த அபிசால்மியா யாரிடமும் சரிவர பேசாமல் வேதனையில் இருந்து வந்தார். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த அவர் கடந்த 6ம்தேதி இரவு கணவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குழந்தை இறந்த சோகத்தில் இருந்த கணவர் ஜலபதிக்கு, காதல்  மனைவியும் உயிரிழந்ததால் பெரும் மன வேதனை ஏற்பட்டது.  விரக்தியிலிருந்த அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in