இஸ்ரேலில் இருந்து இன்னொரு பெகாசஸ்... நவீன ஒட்டுக்கேட்பு உபகரணத்தால் ரேவந்த் ரெட்டியை உளவுபார்த்த கேசிஆர்

ரேவந்த் ரெட்டி - கேசிஆர்
ரேவந்த் ரெட்டி - கேசிஆர்

பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை உளவுபார்த்த குற்றச்சாட்டு தேசிய அரசியலை உலுக்கியதன் வரிசையில், தெலங்கானா மாநிலத்தில் ஒட்டுகேட்புக்கான நவீன உபகரணங்கள் உதவியுடன் எதிர்க்கட்சியினரை உளவுபார்த்ததாக முன்னாள் முதல்வர் கேசிஆர் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை முதல்வர் கேசிஆர் உத்தரவின்பேரில், மாநில உளவு போலீஸார் ஒட்டுக்கேட்டதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கேசிஆர் மகள் கவிதா அமலாக்கத்துறை கைதுக்கு ஆளாகியுள்ள சூழலில், இவ்வாறு பிஆர்எஸ் கட்சியை தவிப்புக்கு ஆட்படுத்தும் பல ரகசியங்கள் அன்றாடம் அங்கே வெளியாகி வருகின்றன.

முதல்வர் கேசிஆர் உடன் டி.பிரபாகர் ராவ்
முதல்வர் கேசிஆர் உடன் டி.பிரபாகர் ராவ்

எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் நீதித்துறையினர் என பிரபலங்களின் ஐபோன் உரையாடலையும், அணுகலையும் தன்வசமாக்கும் பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஆளும் பாஜக ஒட்டுக்கேட்பினை மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கு ஆளானது. இந்த வரிசையில், நவீன ஒட்டுக்கேட்பு உபகரணம் ஒன்றைப் பயன்படுத்தி 300 மீ சுற்றளவில் எதையும் பதிவு செய்யும் அத்துமீறலை கேசிஆர் ஆட்சிக்கால உளவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டதாக தெலங்கானாவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பெகாசஸ் தருவிக்கப்பட்ட இஸ்ரேலில் இருந்தே இந்த நவீன ஒட்டுக்கேட்பு உபகரணம் மற்றும் அதற்கான மென்பொருள் ஆகியவையும் வரவழைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய ஒட்டுக்கேட்பின் மூலமாக ரேவந்த் ரெட்டி உட்பட அப்போதைய எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தலைவர்கள் பலரும் ஒற்றறியப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் வெடித்துள்ளன. இதற்காக ரேவந்த் ரெட்டியின் வீட்டின் அருகேயே அலுவலகம் அமைத்து ரவி பால் என்பவர் தலைமையில் உளவு சாதனங்களை நிறுவி, ஒட்டுக்கேட்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. தற்போதைய முதல்வராக ரேவந்த் ரெட்டி ஆட்சிப் பொறுப்பேற்றதுமே, இந்த ஒட்டுக்கேட்பு அத்துமீறல் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பல பல போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் பதுங்கியுள்ள மாநில உளவுத்துறையின் முன்னாள் தலைவர் பிரபாகர் ராவுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ’ஐ நியூஸ்’ என்ற தெலுங்கு டிவி சேனலை நடத்தி வரும் ஷர்வன் ராவ் மற்றும் போலீஸ் அதிகாரி ராதாகிஷன் ராவ் ஆகியோருக்கும் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நவீன உளவு சாதனங்கள் - மாதிரி
நவீன உளவு சாதனங்கள் - மாதிரி

கைதாகி உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஜங்க ராவ் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருப்பத்தண்ணா ஆகியோர் சட்டவிரோத கண்காணிப்பு மற்றும் ஆதாரங்களை அழித்ததை ஒப்புக்கொண்டதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதற்கு மத்திய அரசிடம் முறைப்படி எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சி தகவலாக, எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டுமன்றி, ரியல் எஸ்டேட் முதலாளிகள், நகைக்கடை அதிபர்கள் மற்றும் பிரபலங்களை கண்காணிக்கவும் சட்டவிரோத உளவுசாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதும் வெளியாகி உள்ளது. இந்த ஒட்டுகேட்பின் உச்சமாக ஒரு பிரபல ஜோடி விவாகரத்து வழிவகுத்ததாகவும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

பல தொழிலதிபர்களின் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டு, அதன் மூலம் அவர்களை மிரட்டி போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் பிஆர்எஸ் கட்சி பெயரில் கட்டாய வசூல் நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் பிஆர்எஸ் கட்சியின் அமைச்சர்கள் பலருக்கும் தொடர்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள், முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் புகாரளிக்க ஆரம்பித்துள்ளனர். தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான சரண் சௌத்ரி என்பவர், பிஆர்எஸ் பெருந்தலையான எர்ரபெல்லி தயாகர் ராவ் என்பவர் தன்னை கடத்தி நிலங்களை மிரட்டி வாங்கியதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை பிஆர்எஸ் கட்சி கனத்த மவுனம் வாசிப்பது மக்களவை தேர்தல் நெருக்கத்தில் அக்கட்சியினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!

எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!

அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு

அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in