போலீஸ் விசாரணையில் ரவுடி அடித்துக் கொலை?: பரபரப்பு புகார்!

ரவுடி சுகுமார்
ரவுடி சுகுமார்

சென்னையில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற ரவுடியை போலீஸார் அடித்துக் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மைலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சுகுமார் (36). சி கேட்டகிரி ரவுடியான சுகுமார் மீது கொலை, அடிதடி, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் ‌. இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சுகுமாரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து கடந்த 27-ம் தேதி சுகுமாரை வழக்கு விசாரணைக்காக மைலாப்பூர் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது திடீரென சுகுமாருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த போலீஸார், சுகுமாரை மேல் சிகிச்சைக்காக மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவுடி சுகுமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் சுகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ரவுடி சுகுமாரை போலீஸார் விசாரணை அழைத்து சென்ற போது அவர் நலமாக இருந்ததாகவும், விசாரணைக்கு அழைத்து சென்று போலீஸார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி விசாரணைக்கு அழைத்து சென்ற சுகுமார் திரும்பி வராததால் சந்தேகமடைந்து காவல் நிலையத்திற்குச் சென்று கேட்ட போது தான் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்தாக போலீஸார் தெரிவித்தனர். அதுவரை போலீஸார் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மருத்துவமனை முன்பு ரவுடி சுகுமாரின் உறவினர்கள் ஒன்றுகூடி கூச்சலிட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in