8 பேர் பலி; 67 பேர் காயங்களுடன் மீட்பு... மும்பை ராட்சத பேனர் சாய்ந்த விபத்தில் மேலும் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்

பெட்ரோல் பங்க் மீது சாய்ந்த ராட்சத இரும்பு பேனர்
பெட்ரோல் பங்க் மீது சாய்ந்த ராட்சத இரும்பு பேனர்

மும்பையில் புழுதிப் புயல் காரணமாக ராட்சத இரும்பு பேனர் சரிந்து விழுந்த விபத்தில் 8 பேர் இதுவரை இறந்துள்ளனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 67 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் 30 பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

வெப்ப அலை வீச்சு, கடும் வெயிலின் உக்கிரம் ஆகியவற்றின் மத்தியில் திடீர் புழுதிப் புயல் மற்றும் மழைக்கு மும்பை மாநகரம் இன்று மாலை ஆளானது. புழுதிப் புயலால் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே போக்குவரத்து முடங்கியது. மரங்கள் சாய்ந்து விழுந்த வெவ்வேறு சம்பவங்களில் ஒரு சிலர் காயமடைந்தனர்.

இவற்றின் மத்தியில் மும்பையின் காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது ராட்சத இரும்பு பேனர் ஒன்று அடியோடு முறிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கினர். முதல்கட்டத் தகவலின் அடிப்படையில் இந்த விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 67 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய மேலும் சுமார் 30 பேர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை ஈடுபட்டு வருகிறது.

ராட்சத இரும்பு பேனர் சாய்ந்த விபத்தை ஆராய்ந்த முனிசிபல் ஆணையர் பூஷன் கக்ரானி, மேற்படி பேனர் சட்டவிரோதமானது என்பதை உறுதி செய்தார். இதனையடுத்து மும்பை மாநகரில் அரசின் அனுமதி பெறாத சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து ஹோர்டிங்குகளையும் நீக்குமாறு மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ5 லட்சம் நிவாரணத் தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.

’மும்பையில் உள்ள அனைத்து ஹோர்டிங்குகளையும் தணிக்கை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றும் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாநில துணை முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் “சம்பவ இடத்தில் பெட்ரோல் பங்க் இருப்பதால் மீட்பு பணி கவனமாக நடந்து வருகிறது. சற்றே தாமதமான போதும் மீட்பு பணியில் முழு கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்தவர், “ஹோர்டிங்குகள் அனுமதியில் நடந்த முறைகேடுகள் தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதிமொழி வழங்கினார்.

இதையும் வாசிக்கலாமே...


குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in