தவறுதலாக சம்பளம் நிர்ணயம் செய்துவிட்டு, பின்னர் சம்பளத்தில் பிடித்தம் செய்ததால் வழக்கு தொடர்ந்த காவலருக்கு, ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடரப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது
சென்னை ஆவடி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் எஸ்.ராஜாவுக்கு, 6வது சம்பள குழுவின் அடிப்படையில் கடந்த 2009 முதல் 2012 வரை ரூ.11,653 சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், 2012 ஜூலை மாதம் சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டது. ராஜாவுக்கு தவறாக சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதனால் கூடுதலாக ரூ.56,363 சம்பளம் தரப்பட்டதாகக் கூறி, அதை படிப்படியாக பிடித்தம் செய்ய பூந்தமல்லி 13வது பட்டாலியனின் கமாண்டென்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து ராஜா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் சம்பளம் எப்படி தவறாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு தரப்பு உரிய விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், சம்பள பிடித்தம் செய்யும் உத்தரவை பிறப்பித்த 13வது பட்டாலியன் காமாண்டென்ட் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவின்படி 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமி நேரில் ஆஜரானார். அப்போது மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி, “மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறுவதில் இருந்தே அவர் மிரட்டப்பட்டுள்ளார் என தெரிகிறது. ஆனால், மனுதாரருக்கு மட்டும் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றம் அவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்கு தொடரும்” என்று எச்சரித்தார்.
பின்னர் 13வது பட்டாலியன் காமாண்டென்ட் அய்யாசாமியிடம், “சம்மந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போன்று வேறு யாருக்காவது பிரச்சினை இருந்தால் அதனை உடனடியாக கண்டறிந்து தீர்க்க வேண்டும். தங்களை நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. சம்மன் அனுப்பவேண்டிய சூழல் ஏற்பட்டதால் தான் அனுப்பினோம்” என்று காமாண்டென்ட் அய்யாசாமியிடம் நீதிபதி தெரிவித்தார். பின்னர் மனுதாரர் வழக்கை திரும்ப பெறுவதாக கூறிய கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!
முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!
பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!