ரூ.15 லட்சம் கேட்டு இலங்கை தொழிலதிபர் சென்னையில் கடத்தல்: போலீஸில் பரபரப்பு புகார்!

தொழிலதிபர் சென்னையில் தங்கியிருந்த வீடு.
தொழிலதிபர் சென்னையில் தங்கியிருந்த வீடு.

சென்னையில் 15 லட்ச ரூபாய் கேட்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் முகமது ஷாம்(42). இவர் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 10-ம் தேதி முகமது ஷாம் தனது குடும்பத்தினரிடம் தொழில் தொடர்பாக சென்னை தொழிலதிபர் ஒருவரைச் சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளார்.

நவ.10-ம் தேதி இரவு சென்னை வந்த தொழிலதிபர் முகமது ஷாம், மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். பின்னர் தான் சென்னை வந்த தகவலை இலங்கையில் உள்ள தனது குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளார்.

மறுநாள் (நவ.11) மாலை தொழிலதிபர் முகமது ஷாமின் மகள் தனது தந்தையைச் செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர்," உன் தந்தையைக் கடத்திவிட்டதாகவும், 15 லட்சம் பணம் கொடுத்து விட்டு தந்தையை மீட்டு செல்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த முகமது ஷாமின் மகள் உடனே இணையதளத்தில் தேடி வடக்கு கடற்கரை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நடந்தவற்றை தெரிவித்தார். அத்துடன் மெயில் மூலம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

அவரது புகாரின் பேரில், வடக்கு கடற்கரை போலீஸார் தொழிலதிபர் முகமது ஷாம் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். நவ.11-ம் தேதி மாலை அவர் அறையை காலி செய்து விட்டு கோயம்பேடு செல்வதாக கூறி விட்டு சென்றதாக விடுதி ஊழியர்கள் தெரிவித்தனர்.

பின்னர் போலீஸார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் தொழிலதிபர் முகமது ஷாம் தனியாக மூன்று தெருக்களில் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. மேலும் அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார், இலங்கைச் சேர்ந்த தொழிலதிபர் உண்மையிலேயே கடத்தப்பட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தனிப்படை அமைத்து காணாமல் அவரைத் தேடிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in