பேட்டி எடுப்பவர்கள் தான் முதல் எதிரி; யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்தும் நேரமிது... உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

யூடியூப் சேனல்களில் பேட்டி தர வருபவர்களை, அவதூறான கருத்துக்களை கூறத் தூண்டும் பேட்டியாளர்களைத் தான் முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பெண்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கோவை, திருச்சி, சேலம், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, ஆகிய மாவட்டங்களில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்
மதுரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்

மேலும், தேனியில் சவுக்கு சங்கர் கைது செய்யப்படும் போது அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் அவரை தேனி போலீஸார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர், சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யூடியூப் சேனல்
யூடியூப் சேனல்

இதனிடையே இந்த வழக்கில், சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டதாக ரெட் பிரிக்ஸ் யூடியூப் சேனலின் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்யலாம் என தகவல் வெளியானது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ”யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. பேட்டி தர வருபவர்களை அவதூறான கருத்துக்களை கூறத் தூண்டுவது பேட்டி எடுப்பவர்கள் தான். எனவே பேட்டி எடுப்பவர்களைத் தான், வழக்கில் முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையடுத்து ஃபெலிக்ஸ் மனு மீது, போலீஸார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி.

இதையும் வாசிக்கலாமே...

வெயில் காலங்களுக்கு எனர்ஜி தரும் சூப்பர் பானங்கள்!

ஒரே பள்ளியில் பயின்ற 13 இரட்டையர்களும் பத்தாம் வகுப்பில் பாஸ்!

லாரியின் உள்ளே ரகசிய அறை வைத்து எடுத்துச் சென்ற ரூ.8 கோடி... ஆந்திராவில் பரபரப்பு!

சென்னை வந்தும் சூர்யாவின் பெற்றோரை பார்க்காத ஜோதிகா... பற்றி எரியும் குடும்பப் பிரச்சினை!

இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in