பெண் கொலை குறித்து வதந்தி... பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு!

கொலை செய்யப்பட்ட கோமதி
கொலை செய்யப்பட்ட கோமதி

தேர்தல் நாளன்று கடலூரில் முன்விரோதம் காரணமாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆனால், அது குறித்து தவறான தகவல்களை பகிர்ந்து இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, கோமதி படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனை பாஜகவினர் பலரும் பகிர்ந்து வந்தனர்.

கொலை
கொலை

இந்த நிலையில், இந்த கொலை தொடர்பாக கடலூர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளதோடு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீஸார் வெளியிட்டுள்ள விளக்கத்தில், ’ஸ்ரீமுஷ்ணம் பத்திரமானியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயக்குமாரின் சகோதரர் ஜெயசங்கர் என்பவரது மகள் ஜெயப்பிரியாவை சிலர் கிண்டல் செய்துள்ளனர். இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கலைமணி என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணி தொடர்ந்து ஜெயசங்கரை மிரட்டி வந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

ஏப்ரல் 19-ம் தேதி வாக்களித்துவிட்டு ஜெயசங்கர், ஜெயக்குமார் ஆகியோர் ஒரு குழுவாகவும், கலைமணி, அவரது மனைவி தீபா, உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள் செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா ,விக்னேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக கலைமணிக்கும் ஜெயசங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.

பிரச்சினையை தடுப்பதற்காக இருவருக்கும் இடையில் சென்ற கோமதி தள்ளிவிடப்பட்டதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனயாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில் கலைமணி, தீபா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆனால், குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு வாக்களிக்காததால் திமுகவினர் கோமதியை தாக்கி கொலை செய்து விட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவலை சிலர் பரப்பியுள்ளனர். இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, கடலூரைச் சேர்ந்த ஹரி பிரபாகர், சண்முகம் உள்ளிட்ட 3 பேர் மீது பொய் செய்தி பரப்பியது, வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்ரீமுஷ்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்த பதிவை பகிர்ந்து அதில் தவறான கருத்துக்களை பதிவிட்டு இருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதும் அதே பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in