சென்னையில் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (42). இவருக்கு சியாமளா தேவி (36) என்ற மனைவியும், 14 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்களும் இருந்தனர். அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த சுரேஷ் பணக்கஷ்டம் காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கடையை மூடிவிட்டார். இதன்பின் கடந்த 10 நாட்களாக வீட்டருகே உள்ள இ சேவை மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மனைவி சியாமளா நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் சுரேஷ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் கணவன், மனைவி இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
அப்போது ஆத்திரம் அடைந்த சுரேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி சியாமளா தேவியின் தொண்டையில் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் கத்தியை அங்கேயே போட்டு விட்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சியாமளாவின் மகன் எழுந்து படுக்கை அறையில் சென்று பார்த்தார். அப்போது அங்கு தாய் சியாமளா ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு கதறி அழுதார். அத்துடன் கதவைத் திறக்க முயன்ற போது கதவு வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்ததால் தட்டி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது சியாமளா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் உடனே கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் . இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் போலீஸார், சியாமளா தேவி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பின்னர் இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷை தேடிவந்த வந்தனர். அப்போது சியாமளா தேவியின் உறவினர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொரட்டூர் கெனால் ரோடு ஏரிக்கரை பகுதியில் பதுங்கி இருந்த சுரேஷை போலீஸார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் .
அப்போது, மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!
இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!
8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!
நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!