பெண் தோழியுடன் விபத்தை ஏற்படுத்திய வாலிபர்; கல்லூரி மாணவன், காவலாளி உயிரிழப்பு

பெண் தோழியுடன் விபத்தை ஏற்படுத்திய வாலிபர்; கல்லூரி மாணவன், காவலாளி உயிரிழப்பு

சென்னையில் கஞ்சா போதையில் வாலிபர் ஓட்டிச் சென்று கார் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகர் இரண்டாவது அவென்யூ பகுதியில் கோரா ஃபுட் எதிரே உள்ள சூப்பர் மார்கெட் வாசலில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று சாலையில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பின்னர் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது விபத்துக்குள்ளானது.

இதில் சூப்பர் மார்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்த நாகசுந்தரம் (74), வினோத்(22), விஜய்யாதவ் (24), தினேஷ்(22), கார்த்திக்(22), கியூமர்(18), ஜான்நிஷா(18) உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். இதில் விஜய்யாதவ், ஜான்நிஷா, கியூமர், தினேஷ் ஆகியோர் கானாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் காயமடைந்த 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இவ்விபத்து குறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கோடம்பாக்கம் சுபேதார் கார்டனைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆசிப் (24) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆசிப் கஞ்சா போதையில் இருந்ததும் இவர் ஏரோநாட்டிக்கல் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஆசிப் தனது நண்பர் ரமணா மற்றும் ஒரு பெண் தோழியுடன் மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு போதையில் கார் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கார் விபத்து ஏற்பட்டதும் ஆசிப் உடன் வந்த ரமணா மற்றும் பெண் தோழி அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் ஆசிப்பை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி நாகசுந்தரம் மற்றும் கானாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவன் விஜய்யாதவ் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in