பெருங்குடி அருகே இடிந்து விழுந்த வீடுகள்
பெருங்குடி அருகே இடிந்து விழுந்த வீடுகள்

கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழி; 5 வீடுகள் இடிந்து சேதம்... பல வீடுகளில் விரிசல் - சென்னையில் அதிர்ச்சி!

சென்னை பெருங்குடி அருகே தனியார் நிறுவனம் கட்டுமான பணிக்காக தோண்டிய குழியின் காரணமாக, மண் சரிவு ஏற்பட்டு, 5 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெருங்குடி அடுத்த பர்மா காலனி, திருவள்ளுவர் நகர், 10வது தெருவில் அரிஹண்ட் பில்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில், தரைத்தளம் மற்றும் நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டுமான நிறுவனம் சார்பில் சுமார் 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியின் காரணமாக அருகில் உள்ள இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, சுற்றியிருந்த 5 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. மேலும் பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கட்டுமான பணிக்காக குழி தோண்டியதால் மண்சரிவு ஏற்பட்டு விபத்து
கட்டுமான பணிக்காக குழி தோண்டியதால் மண்சரிவு ஏற்பட்டு விபத்து

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் வீடுகளின் சுவர்கள் இடிந்துள்ளதாலும், வீடுகள் கடுமையாக சேதம் அடைந்திருப்பதாலும் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் சாலையில் வைத்துள்ள பொதுமக்கள், குளிர் மற்றும் வெயிலில் பாதுகாப்பின்றி தவித்து வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் இருந்த பொருட்களுடன் சாலையில் தஞ்சமடைந்துள்ள மக்கள்
வீட்டில் இருந்த பொருட்களுடன் சாலையில் தஞ்சமடைந்துள்ள மக்கள்

இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திமுகவைச் சேர்ந்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மக்களுக்கு ஆறுதல் கூறினார்
சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மக்களுக்கு ஆறுதல் கூறினார்

இதனிடையே சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவும், இடிந்த வீடுகளை மீண்டும் கட்டித்தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகரின் மையப்பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

x
காமதேனு
kamadenu.hindutamil.in