சென்னை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 4 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது. ஜோதிடர் பேச்சை கேட்டு யாருக்கும் தெரியாமல் மதுரைக்கு சாமி கும்பிட சென்ற மாணவர்களை மீட்டு பெற்றோரிடம் போலீஸார் பத்திரமாக ஒப்படைத்தனர்.
சென்னை வேளச்சேரியை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் 4 பேரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர்கள் பள்ளி மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி அலைந்தனர் .
எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால் பெற்றோர் இது குறித்து பள்ளிகரணை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுவர்களின் புகைப்படங்களை அனுப்பி தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அப்போது சென்னையில் இருந்து மதுரை செல்லும் கன்னியாகுமரி விரைவு ரயிலில் மாயமான நான்கு சிறுவர்களும் பயணம் செய்து கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீஸார், ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் 4 சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் பள்ளிக்கரணை போலீஸார் திண்டுக்கல் விரைந்துச் சென்று சிறுவர்களை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நான்கு சிறுவர்களும் கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளி அருகே உள்ள ஜோதிடர் ஒருவரிடம், ஜோதிடம் பார்த்ததுள்ளனர். அப்போது அந்த ஜோதிடர், நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தால் நன்றாக படிப்பீர்கள் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பி மாணவர்கள் 4 பேரும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து 600 ரூபாயை எடுத்துக் கொண்டு ரயிலில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கோயிலுக்கு செல்வது எனறால், பெற்றோரிடம் சொல்லி விட்டு செல்லுமாறு அறிவுரை வழங்கினர். பின்னர் அவர்கள் நான்கு பேரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அத்தை மகளை/மகனை திருமணம் செய்தால் தண்டனை... சர்ச்சையானது பொது சிவில் சட்டம்!
தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பரபரப்பு தகவல்!
அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது...கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்!
நாளை தை அமாவாசை: பூக்களின் விலை கடும் உயர்வு... 1 கிலோ மல்லி ரூ.2,000/-க்கு விற்பனை!