சென்னையில் பரபரப்பு.. பைக் திருடன் வெட்டிக்கொலை; 3 மணி நேரத்தில் இரண்டு பேரை பிடித்தது போலீஸ்

கைதானவர்கள்
கைதானவர்கள்

சென்னையில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் பைக் திருடனை கொலை செய்த இருவரை 3 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை மற்றும் கைப்பகுதியில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்தனர். உடனே போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட ஜோதி
கொலையுண்ட ஜோதி

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்த ஜோதி (25) என்பதும் இவர் மீது பைக் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மேலும் கொலை சம்பவம் நடந்த இடம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத சில நபர்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை பிடித்து வெட்டிக் கொண்டிருந்ததை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் அந்த நபர்களை பிடித்து தட்டி கேட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த நபர்கள் கத்தியால் மணிமாறனை கையில் சரமாரி வெட்டிவிட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மணிமாறன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மணலியைச் சேர்ந்த ஜோதி எதற்காக திருவொற்றியூர் குப்பம் பகுதி வந்தார்? ஜோதி கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே அதே பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த அபினேஷ்(22) ,சுனில்(20) ஆகிய இருவரை போலீஸார் பிடித்து விசாரணை விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை நடந்த இடத்தில் இன்று அதிகாலை அபினேஷ், சுனில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்த போது அங்கு மது போதையில் வந்த ஜோதி அவர்களிடம் இங்கு வந்து எதற்காக மது அருந்துகின்றீர்கள் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஜோதியை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

மணலியைச் சேர்ந்த பைக் திருடன் திருவொற்றியூரில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in