நடிகர் ஜூனியர் பாலையா
நடிகர் ஜூனியர் பாலையா

RIP Junior Balaiya| நடிப்புக்கு இலக்கணம் பாலையா... நட்புக்கு இலக்கணம் ஜூனியர் பாலையா!

நடிகர் ஜூனியர் பாலையா இன்று சென்னையில் காலமானார். அவருடான நினைவுகள் குறித்து திரையுலகில் பலரும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் ஜூனியர் பாலையா
நடிகர் ஜூனியர் பாலையா

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்காக பெயர் பெற்றவர் பழம்பெரும் நடிகர் பாலையா. சிவாஜி, எம்ஜிஆர் போன்ற ஜாம்பவான்களே பாலையாவிடம் கவனமாக நடிப்பார்களாம். இவரது மூன்றாவது மகன்தான் ஜூனியர் பாலையா. இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக ஜூனியர் பாலையா காலமானார். அவருக்கு வயது 70. ரகு என இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவில் அறிமுகமானதும் ஜூனியர் பாலையா என அன்போடு அழைக்கப்பட்டார். கமல் நடிப்பில் வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

நடிகர் அஜித்துடன் ஜூனியர் பாலையா...
நடிகர் அஜித்துடன் ஜூனியர் பாலையா...

இரண்டாவது படமே நடிகர் சிவாஜியுடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவரின் நடிப்புத் திறமை அட்டகாசமாக வெளிப்பட்ட படங்களில் ‘கோபுர வாசலிலே’ படமும் ஒன்று. அந்தப் படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்து அசத்தி இருப்பார். இதன் பிறகு கங்கை அமரனின் ஹிட் படமான ‘கரகாட்டக்காரன்’ படத்திலும் இவர் நடித்திருந்தார். இதன் பிறகு இயக்குநர் பாக்யராஜ் தனது ’சுந்தரகாண்டம்’, ‘அம்மா வந்தாச்சு’, ‘வீட்ல விசேஷங்க’ போன்ற படங்களில் இவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து நடிப்பில் மிளிரவைத்தார்.

ஜூனியர் பாலையா
ஜூனியர் பாலையா

கடந்த 2007-ம் ஆண்டு வரை திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த ஜூனியர் பாலையா பின்பு சிறிது காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார். பின்பு சமுத்திரக்கனியின் ‘சாட்டை’ மூலம் மீண்டும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். 'தனி ஒருவன்', 'புலி', மீண்டும் ஒரு ரவுண்டு வந்தார்.

கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்தது மட்டுமல்லாது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பெயர் பெற்றார் ஜூனியர் பாலையா. ’சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ போன்ற சீரியல்களைக் குறிப்பிடலாம். இந்த நிலையில் ஜூனியட் பாலையாவின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’நடிகர் பாலையா எப்படி நடிப்புக்கு இலக்கணமோ அதேபோல, ஜூனியர் பாலையா நட்புக்கு இலக்கணம் என்று சொல்கிறார் திரையுலகத்தில் அவருடன் பயணித்தவர்கள். ஜூனியர் பாலையாவின் நடிப்புத் திறனை தமிழ்த் திரையுலகம் இன்னும் அதிகம் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in