மீன் விலைகள் கடும் உயர்வு 
மாநிலம்

ரெமல் புயலால் வேலை இழந்த மீனவர்கள்... மீன்கள் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!

கே.காமராஜ்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால், தூத்துக்குடியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ரெமல் புயலாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது.

கடலில் சூறைக்காற்று வீசுவதோடு கடும் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் எச்சரித்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் அங்காடி

பொதுவாக சனிக்கிழமையும், ஞாயிறு விடுமுறை தினத்திலும் மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் உள்ள திரேஸ்புரம் துறைமுகத்தில் உள்ள மீன் அங்காடியில் மீன் வாங்குவதற்காக வழக்கம் போல் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். ஆனால் மீன்களின் விலை கடந்த காலங்களை விட அதிகளவு உயர்ந்து இருப்பதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 400 முதல் 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ சீலா மீன் தற்போது 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்

ஒரு கூடை சாலை மீன் நேற்று 5 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ரூபாய் விலை உயர்ந்து 6 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதே போல் பாறை மீன் 700 ரூபாய் வரையிலும், குருவளை 350 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் மீன் வாங்க வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வங்கக் கடலில் புயல் கரையை கடந்த பின்னர், நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க சென்றால் மட்டுமே இந்த விலை உயர்வு குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகிறது மழை!

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு... குரூப் 2, 2ஏ பாடத்திட்டம் மாற்றம்!

மே 28 முதல் 60 நாட்களுக்கு 144 தடை உத்தரவு; காவல் துறை அதிரடி

தாமதமாகும் ரெமல் புயல்... கடல் கொந்தளிப்பால் மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையில் திடீர் கனமழை பெய்தால்? தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய தகவல்!

SCROLL FOR NEXT