டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் விஜய் 
அரசியல்

அரசியலுக்கு வரவேண்டாம்; இளைஞர்களை நல்வழிப்படுத்துங்கள்... விஜய்க்கு டாக்டர் கிருஷ்ணசாமி யோசனை!

காமதேனு

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான லியோ திரைப்படம், வெளியான 12 நாள்களில் உலகளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை படைத்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இயக்குனர் லோகேஷ் கனராஜூடன் விஜய்

இந்த பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், லியோ வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றது. செவன் ஸ்கிரீன் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு பல்வேறு முக்கிய விஷயங்களுக்காக உற்று கவனிக்கப்பட்டது. ரஜினிகாந்த் கருத்துக்கு பதிலடி, விஜயின் அரசியல் வருகை என பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் எதிர்பார்த்தபடியே விஜயும் சூசகமாக பல கருத்துக்களை தெரிவித்தார்.

லியோ வெற்றி விழாவில் விஜய்

அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது அவர் தனது அரசியல் வருகை குறித்து பேசியது. “நான் எப்போதுமே தளபதி... மக்களே மன்னர்கள். அவர்களின் பணி செய்யும் தளபதி” என தெரிவித்தார் விஜய். நடிகர் அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோரும் விஜயின் அரசியல் வருகை குறித்தும், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பது குறித்தும் வெளிப்படையாகவே பேசினார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமி

இந்நிலையில், விஜயின் பேச்சு குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, “நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு பதில், மது ஒழிப்பிற்காக வந்து போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார். “முதலில் ரசிகர்களை நல்வழிப்படுத்துங்கள்” என்று அவர் அட்வைஸும் செய்திருக்கிறார். இதனிடையே, “நடிகர் விஜய் போன்றவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வரவேண்டும்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.

SCROLL FOR NEXT