பெரியகுளத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைகலப்பு
பெரியகுளத்தில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைகலப்பு 
அரசியல்

தேனியில் அதிமுக கொடியேற்றுவதில் தகராறு; ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்

காமதேனு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கிவிட்டு தங்களது சார்பில் அதிமுக கொடியை இபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினராலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னாள் முதலமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு இடங்களிலும் இன்று அதிமுக கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளை, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ்-சின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் நகரச்செயலாளர் அப்துல் சமது தலைமையில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அதிமுக கொடி கம்பத்தில் கொடிகளை ஏற்றினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுகவினர் மோதலால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

அப்போது அதிமுக மாவட்ட செயலாளரான முருக்கோடை ராமர், நகர செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். பின்னர் அதிமுக கொடிக்கம்பத்தில் எப்படி கொடியேற்றலாம் என கேள்வி எழுப்பி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கிவிட்டு தங்களது சார்பில் அதிமுக கொடியை ஏற்றினர். இதனால் ஓபிஎஸ் அணியினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது.

இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டதை அடுத்து பெரியகுளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கிருந்து செல்லாமல், இரு தரப்பினரும், தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT