பிரதமர் நரேந்திர மோடி 
அரசியல்

காவிரி நதிநீர் பிரச்சினையில் மோதிக் கொள்ளும் இந்தியா கூட்டணி! திமுக - காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு

காமதேனு

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்றும் காவிரிப் பிரச்சினையில் இந்தியா கூட்டணியில் உள்ள தமிழகம், கர்நாடகா மாநிலங்களை ஆளும் கட்சிகள் மோதிக் கொள்கின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் ரூ.7 ஆயிரம் கோடிக்கான மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், பேரணியாக சென்ற பிரதமர் மோடியை கூடியிருந்த மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் ராஜஸ்தானில் மாநிலத்தை அழித்துவிட்டதாகவும், குற்றப் பட்டியலில் மாநிலம் முதலிடத்தில் இருப்பது தனக்கு வேதனை அளிப்பதாகவும் கூறினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தானில் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன, இதற்காகவா இவர்களுக்கு மக்கள் ஓட்டளித்தார்கள் என கேள்வி எழுப்பினார்.

மேலும், இந்தியா கூட்டணி தலைவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவதை தினமும் செய்து வருகின்றனர். இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம், கர்நாடகாவை ஆளும் மாநில அரசுகள் மோதிக் கொள்கின்றன. இரண்டு மாநிலங்களை ஆளும் கட்சிகளும் இந்தியா கூட்டணியில்தான் இருக்கின்றன. ஆனால், அவர்கள் சண்டையிட்டுக் கொள்கின்றனர். மக்களின் நலனில் இந்தியா கூட்டணிக்கு அக்கறை இல்லை என பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சித்தோர்கரில் மகாத்மா காந்தி உருவ படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார், தொடர்ந்து, அந்நகரில் உள்ள சன்வாலியா சேத் கோயிலில் சாமி தரிசனமும் செய்தார்.

இதையும் வாசிக்கலாமே...

SCROLL FOR NEXT