அர்விந்த் கேஜ்ரிவால், அமலாக்கத் துறை. 
அரசியல்

அமலாக்கத்துறை நெருக்கடி... ஜன.18-ம் தேதி ஆஜராக அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 4வது முறையாக சம்மன்!

காமதேனு

டெல்லி கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை இயக்குநரகம் நான்காவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை தொடர்ச்சியாக சம்மன் அனுப்பி வருகிறது. தனக்கு அனுப்பப்படும் சம்மன்கள் சட்ட விரோதமானது, தன்னை கைது செய்வதே அவர்களின் ஒரே நோக்கம் என தெரிவித்து வரும் அர்விந்த் கேஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராவதை தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை நான்காவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, வரும் 18-ம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளது.

கடைசியாக கடந்த 3-ம் தேதி, அமலாக்கத் துறை சம்மனுக்கு ஆஜராவதை கேஜ்ரிவால் தவிர்த்திருந்தார். அதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 21 மற்றும் நவம்பர் 2 ஆகிய தேதிகளில் அமலாக்கத் துறை கேஜ்ரிவாலுக்கு சம்மன்களை அனுப்பியிருந்தது.

அமலாக்கத் துறை.

டிசம்பர் 21-ம் தேதி சம்மனை தவிர்த்த கேஜ்ரிவால், அப்போது 10 நாள் விபாசனா தியான முகாமுக்குச் சென்றார். கேஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டதிலிருந்தே, விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்ற தகவலும் பரவி வருகிறது.

டெல்லி அரசின் கலால் கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கெனவே ஆம் ஆத்மி தலைவர்களான மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து கேஜ்ரிவாலையும் கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT