அயோத்தியில் கோயில் கட்ட மோடியைத் தான் ராமர் தேர்வு செய்தார்: அத்வானி திடீர் புகழாரம்!

அத்வானியை சந்தித்த மோடி
அத்வானியை சந்தித்த மோடி
Updated on
2 min read

அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்தார் என முன்னாள் துணை பிரதமர் அத்வானி தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது
பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது

அயோத்தியில் தற்போது ராமர் கோயில் கட்டப்படும் இடத்தில்  பாபர் மசூதி இருந்து வந்தது. அது ராமர் கோயில் இருந்த இடம்தான் என்று 1990 காலக்கட்டங்களில் பிரச்சனை எழுந்து தலை விரித்தாடியது. அப்போது இந்த பிரச்சினையை பாஜக கையில் எடுத்தது. குறிப்பாக அத்வானி  இதில் தலையிட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை  முன்வைத்து இந்தியா முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டார். 

அது இந்தியா முழுவதும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  அதன் பின்னர் 1992-ம் ஆண்டு அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் முன்னிலையில் இந்தியா முழுவதும் இருந்து வந்த தொண்டர்கள் பாபர் மசூதியை இடித்து அப்புறப்படுத்தினர். கரசேவை என்ற பெயரிடப்பட்ட இதற்காக நாடு முழுவதும் பெரும் பிரச்சாரம் நடந்து, தொண்டர்கள் திரட்டப்பட்டனர்.  இச்சம்பவம் அனைத்திற்கும் காரணம் அத்வானி என்று அப்போது கூறப்பட்டது.

அத்வானி ரத யாத்திரை
அத்வானி ரத யாத்திரை

இதன் விளைவாகவே அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. வாஜ்பாய் பிரதமர் ஆனார். அத்வானி துணை பிரதமர் ஆனார். பாஜகவும் வளர்ந்தது. அதன் பயனையே  2014-ம் ஆண்டிலும் பாஜக அறுவடை செய்தது.  அப்போது நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பாஜக 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றியைப் பெற்று ஆட்சியை தொடருகிறது. இந்த 2024-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஜன. 22-ம் தேதி நடைபெறுகிறது. 

இந்த நிலையில் கட்சியை வளர்த்தவரும்,  ராமர் கோயில் கட்ட காரணமானவருமான  அத்வானியை  பாஜக புறக்கணிக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அத்வானியை பாஜக தலைவர்கள் சமாதானம் செய்தனர். இந்த நிலையில் அயோத்தியில் தனக்குக் கோயில் கட்ட பிரதமர் மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார் என்று அத்வானி தெரிவித்துள்ளார்.

அத்வானி ரத யாத்திரை
அத்வானி ரத யாத்திரை

"கடந்த 1990 செப்டம்பர், 25-ம் தேதி குஜராத்தின் சோம்நாத் பகுதியில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு ராம ரத யாத்திரை மேற்கொண்டோம். அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவர் இன்று இருப்பது போல பிரபலமானவர் அல்ல. ஆனால், அப்போதே அயோத்தியில் தனக்கு பிரம்மாண்ட கோயில் கட்ட மோடியை பகவான் ராமர் தேர்வு செய்துள்ளார். அதுதான் இப்போது செயல் வடிவம் கண்டுள்ளது.

அந்த யாத்திரையின் போது அரங்கேறிய சம்பவங்கள் எனக்குள் மாற்றத்தை தந்தது. எங்களது ரதம் செல்லும் இடமெல்லாம் யாரென தெரியாத கிராம மக்கள் எங்களுக்கு அதீத வரவேற்பு கொடுத்தனர். அது பகவான் ராமருக்கு கோயில் வேண்டுமென மக்கள் விரும்பியதன் வெளிப்பாடு. வரும் 22-ம் தேதி ராமர் கோயிலில் கவுரவம் மட்டுமல்லது மக்களின் நம்பிக்கையும் மீட்டமைக்கப்பட உள்ளது" என அத்வானி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் அத்வானியும் பங்கேற்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in